மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (11)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.


இந்தியாவில் மூளைவறட்சி ஏன்?
- ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை
- முஸ்தபா, ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பூர், கடலூர்
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் ஏராளமான துறை நிபுணர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவர்களில் சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதைப் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர். சொந்த நாட்டில் பணிபுரிவதா அல்லது வெளிநாட்டுக்கு செல்வதா என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்ததுதான். தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை உள் உணர்வில்தான் ஏற்படுவது.


நிலவுக்கு மனிதனை எப்போது இந்தியா அனுப்பும்?
- பிரபு, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளி, ஈரோடு
இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுதொடர்பாக முயற்சி செய்து வருகிறார்கள். சந்திரனில் தற்போது பூமியில் காணப்படும் எரிபொருளை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளான ஹீலியம்-3 சந்திரனில் காணப்படுகிறது. ஏழ்மையை ஒழிக்க அவற்றை இங்கு கொண்டு வருவது அவசியம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டம்.


கல்லாமையை ஒழிக்க மாணவர்களாகிய எங்கள் கடமை என்ன?
- தண்டபாணி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், கோவை
மாணவர்களாகிய நீங்கள் கல்லாமையை ஒழிப்பதில் பங்கேற்க முடியும். உங்கள் விடுமுறை காலங்களில் நீங்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு 10 பேருக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள். இதுபோன்ற முயற்சியை மாணவர்கள் தொடங்கினால் இந்தியாவில் கல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us