மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள்-(3)

எழுத்தின் அளவு :

தினமலர் கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.


 


நிலவில் மனிதன் கால் வைத்ததற்கும் இப்போது அனுப்பியுள்ள சந்திரயானுக்கும் என்ன வேறுபாடு?
- ஜோ பெர்னாண்டோ, கேந்திரிய வித்யாலயா, மண்டபம்
- ரேஷ்மா, ஸ்ரீஅரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.
- மணிகண்டன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், வேலூர்
- சுகன்யா, கே.சி.இ.டி., விருதுநகர்
- சிதம்பரம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்
- விக்கி, எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளி, திருச்சி


சந்திரயான் 100 கி.மீ., கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனை சுற்றி வருகிறது. மிகக்குறைந்த செலவில் சந்திரனுக்கு செல்ல முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. சந்திரனின் தொலையுணர்வு செயற்கைக்கோளாக சந்திராயன் செயல்படும். சந்திரனின் தரைப்பகுதியை ஆராய்ந்து, ரசாயன மற்றும் தனிமங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான தகவல்களை அனுப்புவதே சந்திரயானின் நோக்கம். மனிதர்கள் யாரும் சந்திரயான் திட்டத்தில் செல்லவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் நிலவிலும் ஓர் இந்தியரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.


 


தலைவர் ஆவதற்கு தேவைப்படும் தகுதிகள் என்ன? தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி?
- வசந்த் தங்கவேல், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை



தொலைநோக்கு பார்வை, நடுநிலை நோக்கு, நம்மால் முடியும் என்ற எண்ணம், வெல்ல முடியாததை வெல்லும் எண்ணம் ஆகியனவே தற்போது வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தலைமைப்பண்புக்கு தேவைப்படக்கூடியன. ஆய்வு மனப்பான்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


 


 


லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
- கார்த்திக், அரசு கலைக் கல்லூரி, திருநெல்வேலி
- வினுக்குமார், விவசாயக் கல்லூரி, மதுரை
- குழந்தை வேல், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம்
- முகுந்தன், பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை


குடும்பத்தில்தான் அறிவார்ந்த குடிமக்கள் உருவாகின்றனர். இந்த சூழ்நிலை உருவாகவில்லை என்றால் இப்போது நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலையைத்தான் உணர முடியும். லஞ்சத்தை ஒழிப்பதற்கான நாடு தழுவிய இயக்கம் தேவைப்படுகிறது. குடும்பத்திலும் பள்ளிகளிலும்தான் தோன்ற வேண்டும்.


மூன்று பேரால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் அவர்கள். குழந்தைப் பருவத்திலேயே நேர்மையை அவர்கள் கற்பித்தால் அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். பொது வாழ்வில் ஊழலை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இயக்கம் துவங்க வேண்டும்.


 


குடும்பத்தில், கல்வி பயிலும் இடத்தில், பணியிடத்தில், தொழிலில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையில், நிர்வாகத்தில், அரசியலில், அரசில், நீதித்துறையில் நேர்மை இருக்க வேண்டும்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us