ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,ஜே.இ.இ.,

எழுத்தின் அளவு :

1. ஐ.ஐ.டி.,  ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது?
நாட்டிலுள்ள ஏழு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஐ.ஐ.டி., இந்த பொதுவான தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதும் இதற்கான மையங்கள் உள்ளன.

2.இத்தேர்வை எழுதுவது ஐ.ஐ.டி.,யில் மட்டுமே சேர முடியுமா?
ஐ.ஐ.டி.,யில் சேர்வதோடு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தான்பாத் சுரங்கவியல் பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனத்தில் சேர்வதற்கு இந்த தேர்வு உதவும்.

3.போட்டி கடுமையானதாக இருக்குமா?
நாடு முழுவதும் நடக்கும் இத்தேர்வில் பங்கு கொள்ள ஏறத்தாழ இரண்டரை லட்சம் மாணவர்கள் போட்டியிடுவார்கள். ஆனால் மொத்தமுள்ள இடங்கள் ஏறத்தாழ 5 ஆயிரத்து 537 மட்டுமே. ஆக ஒரு இடத்துக்கு ஏறத்தாழ 45 பேர் போட்டியிடுகிறார்கள்.

4.தேர்வு எப்படி நடக்கிறது... வெற்றி பெற வழி என்ன?
வெற்றி பெறுவதற்கு உரிய வழி, சரியான பயிற்சியும் முயற்சியுமே ஆகும். பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பதும், எந்த கேள்வி கேட்டாலும் உடனுக்குடன் விடையளிக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயிற்சி வகுப்புகளில் முன்னதாக சேர்ந்து மாதிரித் தேர்வுகளையும் எழுதலாம். ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. இதற்கான நேரம் தலா 3 மணி.

5.தமிழகத்தில் எங்கெல்லாம் தேர்வு நடைபெறுகிறது?
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 126 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.

6.தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படுமா?
இல்லை. சரியான விடைக்கு வெவ்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப மதிப்பெண் அளிக்கப்படுகிறது.

7.எந்த அடிப்படையில் மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்க்கப்படுகின்றனர்?
தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர் விருப்பத்துக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

8.இந்நுழைவுத் தேர்வின் மூலம் எந்தெந்த பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது?
பி.டெக்.  பி.பார்ம், பி.டிசைன், பி.ஆர்க்., ஆகிய இளநிலை படிப்புகளுக்கும் எம்.பார்ம், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., உள்ளிட்ட  இரட்டை பட்டப்படிப்பு, முதுநிலை இன்டக்ரடேட் படிப்புகள் உள்ளிட்ட 60 படிப்புகளுக்கு மாணவர்கள் சேரலாம்.

9. ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கு எப்போதிருந்து தயாராக வேண்டும்?
பொதுவாக இது மாணவரின் தனித்திறனுக்கு ஏற்ப மாறுபடும். பாடத்திட்டத்தில் நல்ல திறனுள்ள மாணவர் எந்த சிறப்பு பயிற்சி இல்லாமலேயே தேர்ச்சி அடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் 9ம் வகுப்பு முடிந்தவுடன் இதற்காக பயிற்சி செய்வோரும் இருக்கின்றனர். ஆகவே, பயிற்சியும் விடா முயற்சியும் மட்டுமே இந்த தேர்வு உங்களை வெற்றியாளராக்கும்.

10. எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம்?
இரண்டு முறை எழுதலாம். நடப்பு ஆண்டில் பிளஸ் 2 முடித்திருக்கும் மாணவர்களும், கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களும் இத்தேர்வுக்காக தயாராவார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us