பெண் கல்வி மிகவும் அவசியம் | Kalvimalar - News

பெண் கல்வி மிகவும் அவசியம்

எழுத்தின் அளவு :

சென்னை: மயிலாப்பூர் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா, பாரதிய வித்யாபவனில் நவ. 17ம் தேதி நடந்தது.

பள்ளியின் பொன்விழா ஆண்டு கட்டடத்தை திறந்து வைத்து, இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதா மூர்த்தி பேசியதாவது:
நடுத்தர குடும்பத்தில் மாதச் சம்பளம் வாங்கும் தந்தைக்கு மகளாகப் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து, ஆசிரியையாக வாழ்க்கையை ஆரம்பித்து தான் தற்போது இந்த நிலைக்கு நான் உயர்ந்திருக்கிறேன். உயர்ந்த குறிக்கோளை நிர்ணயித்து, அதை அடையும் நோக்கில் தொய்வில்லாமல் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக இலக்கை அடைய முடியும்.

மூர்த்தி உயர்ந்த இலக்கை கனவு கண்டதோடு, அதை அடையும் வகையில் செயல்பட்டதால் தான் இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. நீங்களும் உயர்ந்த லட்சியத்தை கனவு காணுங்கள்; அதை அடையும் நோக்கில் செயல்படுங்கள். நேர்மை, உண்மை இவற்றுடன் கடுமையான உழைப்பு இம்மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்வி அடைந்துவிட்டால் அதையே நினைத்து வருத்தப்படக் கூடாது. மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதே ஆசிரியர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி அளிப்பது மிக முக்கியம். ஒரு பெண் படித்தால், குடும்பத்தில் வருங்கால சந்ததியினருக்கும் அவளால் கல்வி கற்பிக்க முடியும்.

உங்களது பள்ளியில் மாணவிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏழ்மை தான் காரணம் என்றால், சம்பந்தபட்ட மாணவிகள் தொடர்ந்து படிக்க என்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சுதா மூர்த்தி பேசினார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் பேசியதாவது:
கல்வியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் கூட கல்வியின் அவசியம் குறித்து மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். கலை, அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் ஏராளமாக இருக்கின்றன.

மாணவர்கள் தரமான கல்வியைப் பயில ஏற்ற வாய்ப்புகளும், வசதிகளும் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றன. இதை மாணவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். சுதா மூர்த்தி குறிப்பிட்டதுபோல், மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், நேர்மையுடனும் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இவ்வாறு கபிலன் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us