திருப்பூர் கல்வி சாதனையின் சீக்ரெட்; மனம் திறக்கும் சி.இ.ஓ., | Kalvimalar - News

திருப்பூர் கல்வி சாதனையின் சீக்ரெட்; மனம் திறக்கும் சி.இ.ஓ.,மே 13,2019,11:18 IST

எழுத்தின் அளவு :

‘திருப்பூரில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இரவு பகலாக உழைத்த மக்களை பலரும் அறிவோம். மாணவர்களுக்காக, அவர்களது எதிர்காலத்திற்காக, இரவு பகலாக உழைத்த ஆசிரியர்கள் பற்றி நாம் அறிவோமா? உண்மையில் ஆசிரியர்களின் ஆக்கப்பூர்வான ஒத்துழைப்பே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 இரண்டிலும் திருப்பூர் மாவட்டம், மாநிலத்திலே முதலிடம் பிடிக்க முக்கிய காரணம்’ என, மனம் திறக்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி.



அவர் மேலும் கூறியதாவது:



திருப்பூரை கல்வியில் முதலிடத்திற்கு கொண்டுவர வேண்டுமென கடந்தாண்டே முடிவு செய்துவிட்டோம். இதற்கு தடையாக இருப்பது எவை என்பதை அறிய, திருப்பூரில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கும், 7 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கு தொடர்ச்சியாக ஆய்வு செய்தோம். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்தால் போதும் என நம்பினோம். நுாறு சதவீத தேர்ச்சி பெற தகுதியுள்ள அரசு பள்ளிகளை தொடர்ந்து ஊக்குவித்து வந்தோம்.



ஆசிரியர்களை முதலில் தயார்படுத்தினோம். அவர்களுக்கான முதல் நிபந்தனையே, ‘எந்த சூழலிலும் மாணவனிடம், ‘நெகட்டிவ்’ ஆக ஒரு வார்த்தை பேசக்கூடாது’. பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களே, பெற்றோர்களாக மாறிவிட்டனர். நிறைய ஆசிரியர்கள் மாணவர்களை வீட்டிலும், பள்ளியிலும் தங்கவைத்து, உணவு அளித்து படிக்க வைத்த நிகழ்வும் உண்டு. இடமாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் முழுவதும் வகுப்பு ஒதுக்கி, பாடம் எடுக்க வைத்தோம். மாணவர்களுக்கு வகுப்பு தேர்வு நடத்தி, அவர்களையே திருத்த வைத்தோம்.



பாடவாரியாக முக்கியத்துவம்



இப்படி மாணவர்களே அவர்களை மதிப்பீடு செய்ய வைத்ததால், போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தனர். அடுத்து, எந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என ஆய்வு செய்தோம். கணக்கு, வணிகவியல், வரலாறு இந்த மூன்று பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அரையாண்டு தேர்வுக்கு முன்பே ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரையும் வரவைத்து தனிப்பட்ட முறையில் பேசினேன். இந்த மூன்று பாடங்களில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியும் என்றால், மற்ற அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற வைத்தே ஆக வேண்டும் என அறிவுறுத்தினேன்.



அவர்கள் தந்த வாக்குறுதி அடிப்படையில் தேர்ச்சி விகிதம் கணக்கிட்டபோது, அரையாண்டு தேர்விலே குறைந்தபட்சம், 98 சதவீதம் தேர்ச்சி கிடைத்தது. மாணவர்களின் கற்றல் திறனை அடிப்படையாக கொண்டு, ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று பிரிவுகளாக தரம் பிரித்தோம். ‘பி’யிலிருந்து, ‘ஏ’க்கும், ‘சி’ யிலிருந்து, ‘பி’ மற்றும், ‘ஏ’க்கு மட்டுமே மாணவர்கள் முன்னேற வேண்டும். ஒருபோதும்  பின்னுக்கு வரக்கூடாது என தெளிவாக இருந்தோம். இதை உணர்ந்து ஆசிரியர்கள் தீவிரமாக பயிற்சி அளித்தனர். அரையாண்டு தேர்வுக்கு பிறகு, ‘சி’ பிரிவில் எந்த மாணவனும் இல்லை எனும் நிலை வந்த போது நம்பிக்கை வந்தது.



போராட்டத்திலும் கைக்கொடுத்த ஆசிரியர்கள்..!



சென்ற வருடம் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம், பல கட்டமாக நடந்த, ‘ஜாக்டோ ஜியோ’ போராட்டம்தான். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ்1 வகுப்பு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஐந்து ஆசிரியர்கள் நான்கு பேர் போராட்டத்துக்கு சென்றால் அதில், ஒருவர் பொறுப்பெற்று பள்ளிக்கு வந்து நாள் முழுக்க வகுப்பெடுத்து, மாணவர்களை கவனித்தார்.



அனைத்து குழந்தைகளும் முக்கியம் எனும் அடிப்படையில் ஒவ்வொரு தனியார் பள்ளி முதல்வர்களையும் அழைத்து ’மீட்டிங்’ நடத்தினோம். நுாறு சதவீத தேர்ச்சி கட்டாயம் எடுக்க வேண்டுமென ஒவ்வொரு முறையும் சொல்லிவந்தேன். இந்த சாதனைக்கு நான் மட்டுமே காரணமாகிவிட முடியாது. எனக்கு முன் இருந்த ஒவ்வொரு சி.இ.ஓ.,களும் இதற்கான அடித்தளத்தை அமைத்துகொடுத்துள்ளனர். இருப்பினும், குறைகளை நிறையாக்குவதில் அதிக கவனம் செலுத்தியதால் இந்த சாதனையை பெற முடிந்தது.



இப்போது முதலிடத்திற்கான ருசியை திருப்பூர் மாவட்டம் உணர்ந்து விட்டது. இதனை வருங்காலத்தில் தக்க வைக்க ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் ஈடுபாட்டோடு செயலாற்றினாலே போதும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது!



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us