திறன்களை பொறுத்தே வேலையும், ஊதியமும்! | Kalvimalar - News

திறன்களை பொறுத்தே வேலையும், ஊதியமும்!ஜூலை 05,2019,10:50 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, இன்று ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் அங்கம் வகிப்பதை யாராலும் மறுக்கமுடியாது. முன்பெல்லாம், முன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தொழில்நுட்பம் மாற்றம் காணும். ஆனால், இன்று ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வரத்தொடங்கிவிட்டன!




ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜென்ஸ், பிக் டேட்டா, ஐ.ஓ.டி., வி.எல்.எஸ்.ஐ., எம்பெடடு டெக்னாலஜி, டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் என கம்ப்யூட்டர் துறை சார்ந்து மட்டும் அல்லாமல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிஸ் போன்ற கோர் இன்ஜினியரிங் துறைகளிலும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வருகின்றன. அரசு திட்டங்களிலும் அதற்கேட்ப மாற்றம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உதாரணமாக, ஆட்டோமோட்டிவ் துறையில் ‘எலக்ட்ரிக்’ வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது.




இந்தசூழ்நிலையில், இன்ஜினியரிங் படிக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எதனால் ஏற்படுகிறது என்றால், 4 ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பை படித்து முடித்தால் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தால் தான்... நல்ல வேலை கிடைத்தால் அவர்களது வாழ்க்கைத்தரமே மாறுமே என்ற அவர்களது எதிர்பார்ப்பில் எந்த தவறும் இல்லை. எதிர்பாராத விதமாக, இன்ஜினியரிங் படித்த அனைவருக்குமே வேலை கிடைக்கவில்லை. அதேதருணம், மறுபுறம் பார்த்தோமேயானால், நாம் எப்படி வேலை கிடைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோமோ, அதேபோல தொழில்நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை அறிந்த, தகுதியான இன்ஜினியர்கள் கிடைக்காமால், திறன் படைத்தவர்களை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றன. 




இன்ஜினியரிங் படித்து இன்று வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் அதே வேலை அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றால்? 60 -80 சதவீதம் நிச்சயம் இருக்காது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சமூகத்தில் இன்றுள்ள அன்றாட பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு தீர்வு காணும் வகையில், கல்லூரி மாணவர்கள் 'புராஜெக்ட்’ செய்ய வேண்டும். அவ்வாறு செய்வார்களேயானால், நிச்சயமாக அவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் இன்று கிராமப்புறத்தில் உள்ள கல்லூரிகளில் உள்ள திறமையான மாணவர்களை வேலைக்கு தேர்வுசெய்கின்றன.




தொழில்நிறுவனங்கள், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் ஊதியமும் தருகின்றன; 30 லட்சம் ரூபாய் ஊதியம் தருகின்றன. ஒருவருடைய திறன்களை பொருத்தே இந்த ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்ஜினியரிங் படிப்பை எப்படி படிக்க வேண்டும்? எந்தெந்த தொழில் நிறுவனங்களில் என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன? அதற்கு ஏற்ப என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து , அவற்றை கல்லூரி காலத்திலேயே வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், சுயதொழில் செய்தும் வாழ்க்கையில் சாதிக்கமுடியும். அதற்கு, அரசு திட்டங்களும், கல்வி நிறுவனங்களும் வழிவகுக்கின்றன. 




ஏராளமான திறன் வளர்ப்பு பயிற்சிகள் இன்று ஆன்லைனிலேயே வழங்கப்படும் நிலையில், சுயமாக கற்கும் ஆர்வத்தையும் இன்றைய மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். அவ்வாறு தேவையான திறன் களை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், மாணவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை தரத்தை நிச்சயம் அமைத்துக்கொள்ள முடியும்!




-ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us