படிப்பில் ஏற்றத்தாழ்வு ஏது? | Kalvimalar - News

படிப்பில் ஏற்றத்தாழ்வு ஏது?ஜூலை 06,2019,13:32 IST

எழுத்தின் அளவு :

மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போன்று கலை அறிவியல் படிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். என்னைப் பொறுத்தவரை, படிப்பில் ஏற்றத்தாழ்வுகள் என்பதே இல்லை. எனினும், சமுதாயத்தில், மருத்துவம், பொறியியலுக்கு இணையாக கலை அறிவியல் மாணவர்கள் பார்க்கப்படுவது இல்லை!




கலை பிரிவு மாணவர்கள், தொழில்முறை படிப்பு மாணவர்களைப் போன்று கல்வியில் சீரியசாக இல்லாததுபோல தோற்றம் அளித்தாலும், தொழில்முறை மாணவர்களுக்கு இணையாக கலை அறிவியல் மாணவர்களும் சாதனை படைத்துத்தான் வருகிறார்கள்.




இன்றைய காலக்கட்டத்தில், அனைத்து துறை மாணவர்களும், பாடத்திட்டத்தை கடந்து, துறை சார்ந்த இதர திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனை உணர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, பி.காம்., மாணவர்களுக்கு ஆன்லைன் இ-பைலிங், டேலி, வங்கி செயல்பாடுகள் ஆகிய துறை சார்ந்த இதர பயிற்சிகள் செயல்முறையில் அளிக்கப்பட வேண்டும்.




எந்த துறையாக இருந்தாலும், மாணவர்களது ஆப்டிடியூட், பர்சனாலிட்டி, தொடர்பியல் திறன் ஆகியவற்றிற்கு இன்று, அனைத்து முன்னணி தொழில் நிறுவனங்களும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், இத்தகைய பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு வழங்கும் பட்சத்தில் அதன் பலன்களை சில காலங்களிலேயே கண்கூடாக பார்க்கமுடியும். 




மாணவர்களது எதிர்பார்ப்பு 


இன்று, கல்லூரியில் சேரும் 70 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள நிலையில், வேலை வாய்ப்பு சார்ந்த திறன்களை பாடத்திட்டத்திலேயே இடம்பெறச் செய்ய வேண்டும். அது அரசாங்கத்தால், உடனடியாக சாத்தியம் இல்லாத பட்சத்தில், கல்வி நிறுவனங்கள் கூடுதல் பொறுப்பேற்று, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.




தொழில்நிறுவனங்களில் நேரடி செயல்முறை பயிற்சி என்பது பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமின்றி, கலை அறிவியல் மாணவர்களுக்கும் அவசியம். உதாரணமாக, பேஷன் டிசைன் மாணவர்களை செமஸ்டருக்கு மூன்று முறை, டிரஸ் மேனுபாக்சரிங், எக்ஸ்போர்ட் ஹவுசஸ் ஆகியவற்றிற்கு அழைத்து சென்று டையிங், ஸ்டிச்சிங், டெய்லரிங் போன்றவற்றில் நேரடி பயிற்சி அளிப்பதால், படிப்பு முடித்த பிறகு உள்ள வாய்ப்புகளை மாணவர்களால் முன்கூட்டியே உணர்ந்து, தெளிவு பெற உதவும். இதற்கு நிறுவனங்களுடன் அதிகளவிலான ஒப்பந்தங்களை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். 




எல்லை இல்லை


மீதமுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் தொழில்முனைவோருக்கான பயிற்சியையும் ஒரு கல்வி நிறுவனம் அளிப்பது சிறந்தது. கல்லூரி வளாகத்திலேயே தொழில்முனைவோர் மையத்தை  ஏற்படுத்தி, அவ்வப்போது சுயதொழில் புரிவதற்கான பயிற்சியை வழங்கவேண்டும். இவ்வாறு, எந்த ஒரு கல்வி நிறுவனமும், தொடர்ந்து அவர்களது கல்வி தரத்தை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு எல்லை என்பதே இல்லை. பேராசிரியர்களை தரமானவர்களாக மாற்றுவதன் மூலமும், கல்வி தரத்தை மேம்படுத்த முடியும். 




அதேநேரம், மாணவர்களுடன் தோழமை உணர்வுடன் பேராசிரியர்களும் சரி, கல்வி நிர்வாகமும் சரி செயல்பட வேண்டும். இவற்றையே 28ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் கல்வி நிறுவனத்திலும், தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்!




-ஜெய்ஸ்ரீ சந்தோஷ், செயலர், வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us