ஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும். ஆகஸ்ட் 09,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மருத்துவத் துறையும் காலத்திற்கேற்ற மாற்றங்களை கண்டு வருகிறது. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தைப் போலவே ஹோமியோபதி என்னும் மாற்று மருத்துவமும் உலகெங்கும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்ச்சைகளை மீறி ஹோமியோபதியின் மகத்துவத்தை பல ஆங்கில மருத்துவர்களே அறிந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

ஒரு நோயை உருவாக்கும் தன்மை எதற்கு உள்ளதோ அதைக் கொண்டே அந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதே இத்துறையின் அடிப்படைத் தத்துவம். கி.பி.1796ல் ஜெர்மனியின் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ முறையானது சிறந்த வரலாற்றுச் சுவடுகளுடன் இன்று வளர்ந்துள்ளது. லா ஆப் சிமிலர்ஸ் என்னும் அடிப்படையில் மருந்து காணும் இந்த அற்புதமான மருத்துவமுறைக்கு இன்றைய யுகத்தில் அதிக தேவையும் பரவலான வரவேற்பும் இருப்பதைக் காண்கிறோம்.

பொது உடல்நல முறை போதிய அளவில் இல்லாத இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையுள்ள நாடுகளில் திடீரென பரவும் நோய்களைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் ஹோமியோபதி பெரும் பங்காற்றி வருவதை பலர் அறிவர். பறவைக் காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை குணப்படுத்துவதில் இதன் சிறப்பான பங்கை வெளிநாடுகளும் இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் நன்கு அறியும்.
இத் துறையில் முறையான படிப்புகள் தரப்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக இதைப் படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

எம்.பி.பி.எஸ். படிப்பைப் போலவே இதற்கும் பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பி.எச்.எம்.எஸ். எனப்படும் பாச்சலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி படிப்பு 5 1/2 ஆண்டு படிப்பாகும். அதன் பின் ஒரு ஆண்டு காலத்திற்கு ஹோமியோபதி டாக்டர் ஒருவரின் கீழ் இன்டர்ன்ஷிப் முறையில் பணியாற்ற வேண்டும்.

இந்தியாவில் இந்தப் படிப்பானது 160க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுவதே பலருக்கும் தெரியாத என்பதே வியப்பான உண்மை. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் மேலும் ஒன்றரை ஆண்டு சிறப்பு உயர் படிப்பை முடித்த பின் வெளிநாடுகளுக்கு பணியாற்றச் செல்லலாம். இதில் எம்.டி. படிப்பும் தரப்படுகிறது.

வாய்ப்புகள் எப்படி?:
எம்.பி.பி.எஸ். முடிப்பவரைப் போலவே பி.எச்.எம்.எஸ். முடிப்பவரும் தனியாக மருத்துவப் பயிற்சி செய்யலாம். இந்த மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோயே இல்லை என்று இந்த சிகிச்சை பெறுபவர்கள் பலர் கூறுவதைக் கேட்கலாம்.

ஹோமியோபதியிலும் ஆய்வுக்கான பல அம்சங்கள் உள்ளன. உலக அளவில் இந்த வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் பேராசிரியர்களாகவும் பணியாற்றலாம். இத் துறையில் ஒருவர் பெறும் வருமானம் என்பது அவரின் திறமையைப் பொறுத்தது. இதில் ஒருவர் மருத்துவராக எந்த இடத்தில் பணி புரிகிறார், சிகிச்சைக்கான கட்டணம் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அவரது வருமானம் அமைகிறது. ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகள் ஒரு ஆண்டு சிகிச்சைக்காக ஒருவரிடம் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை பெறுகின்றன.

தனியாகப் பயிற்சி செய்யும் மருத்துவர் 15 நாள் சிகிச்சைக்கு ரூ.70 முதல் 200 வரை வாங்குகிறார். இங்கிலாந்து ராணி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஹிரித்திக் ரோஷன் மற்றும் தொழிலதிபர் அம்பானி என வாழ்வின் மேல் மட்டத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட தங்களது அனைத்து மருத்துவப் பிரச்னைகளுக்கும் இந்த முறையை மட்டுமே நம்புகிறார்கள். தலைவலிக்கு இந்த மாத்திரை என்று அலோபதி போல அல்லாமல் நோயாளியை உளவியல் ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் அணுகி அவருக்கான மாத்திரையை தேர்வு செய்து தரும் இந்த மருத்துவ முறை செலவு அதிகம் இல்லாதது என்பதே மிக ஆறுதலான முக்கியத் தகவல்.

சர்ஜரி போன்ற தேவைகள் ஏற்படும் போது அதை செய்து கொண்டு மேற்கொண்டு ஓமியோபதி சிகிச்சை பெறுவதும் வலியுறுத்தப்படுவதால் இன்று இதை நாடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே இத் துறையில் ஏனோதானோவென்று படித்து பயிற்சி செய்யாமல் சமுதாயக் கடமையுணர்வோடும் அர்ப்பணிப்புணர்வோடும் இதைப் படித்து முடித்து வெளிவருபவர்கள் இதில் கட்டாயம் சிறந்து விளங்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் அரசு ஹோமியோபதி கல்லூரிகளும் தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

பல இடங்களில் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி., முடித்து இந்த மாற்று மருத்துவ முறைக்கு மாறிக் கொண்டு பொதுச் சேவை செய்யும் டாக்டர்கள் பலர் உள்ளனர். மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் மனநலன்களையும் சேர்த்து பரிசோதித்து மருத்துவம் தரும் இந்த மருத்துவ முறையில் நீங்கள் பெறும் திருப்தி அலாதியானது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us