மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பணிகள் | Kalvimalar - News

மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பணிகள்ஆகஸ்ட் 24,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு என்பது நமது சமையலின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. குளிர்சாதன பெட்டி கண்டுபிடிக்கப்படும் முன்னர், உப்புதான் உணவுப்பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதற்கான ஒரு உபாயமாக இருந்தது.

இன்று, தொழிற்சாலைகளில் உப்பு பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் சோடா சாம்பல் ஆகியவற்றின் தயாரிப்பில் உப்பு முக்கியப் பயன்பாட்டுப் பொருள். மீன்களை கெடாமல் பாதுகாத்தல், காய்கறிகளைப் பதப்படுத்தல், இறைச்சிப் பதப்படுத்தல் மற்றும் காகிதத் தயாரிப்பு போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளிலும் உப்பின் முக்கியத்துவம் அதிகம்.

உலகின் முக்கிய உப்பு உற்பத்தி நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுடன், இந்தியாவும் தனது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்திய உப்புத் தயாரிப்பில் 70% கடல் மூலம் நடைபெறுகிறது. நீண்ட கடற்கரையைக் கொண்டிருக்கும் மாநிலங்களில் இந்தத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இந்தியா தற்போது உப்பின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், உப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம். இத்துறையில் தற்போது ஆராய்ச்சி செய்துவரும் நிறுவனங்களுள் முக்கியமானது குஜராத்திலுள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம்(CSMCRI) ஆகும்.

கடந்த 1950களின் தொடக்கத்தில், கடல் உப்பு, ஏரி உப்பு மற்றும் உவர் நீரிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு ஆகியவைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கின. மத்திய உப்பு மற்றும் கடல்சார் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம், அன்றிலிருந்து இன்றுவரை, உப்பு தொடர்பான ஆராய்ச்சியில் பலவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டு வருகிறது.

தேசிய அளவிலான முதன்மை ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 250 ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் திட்ட உதவியாளர்கள் தங்களின் Ph.D ஆய்வை மேற்கொள்ள இந்நிறுவனம் வழிகோலுகிறது.

இந்நிறுவனத்தின் சில முக்கிய சாதனைகள்

* செறிவூட்டப்பட்ட இயற்கை உவர் நீரிலிருந்து உயர்தர மக்னீசியத்தை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கியது.

* ஜட்ரோபா கர்காஸிலிருந்து(Jatropha curcas), நேர்த்தியான பயோடீசல் உருவாக்கம்

* சிறப்பான நீர் சுத்திகரிப்புக்கான ஹாலோ பைபர்(hollow-fibre) உயர்தர வடிகட்டுதல் சவ்வு மேம்பாடு

* இயற்கை உவர்நீரிலிருந்து தூய்மையான உப்பு தயாரிப்பு

* மாலிக்யூலர் பயாலஜி மற்றும் ஜெனடிக் இன்ஜினியரிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உப்பு தாங்குதல் கலப்பு மரபின வேளாண் பயிர்களை தயாரித்தல்.

கடல்சார் ரசாயனங்கள்(Marine chemicals)

கடல், நிலத்தடி, உள்நாட்டு உவர்நீர் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் உப்பின் மேம்பாடு மற்றும் அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் இத்துறை சார்ந்தவை. பொட்டாஷியம், மக்னீஷியம் போன்ற மதிப்புவாய்ந்த கடல் ரசாயனங்களை மீட்கொணர்வதற்கான தகுதிவாய்ந்த செயல்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இவைத்தவிர, சோலார் உப்பு பணிகளின் வடிவமைப்பு மற்றும் உப்பு உற்பத்தியின் சிறந்த முறைகளை காட்டுவதற்கு நவீன உப்பு பணிகளை நிறுவுதல் உள்ளிட்ட பலவித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

உயிர்பொருளற்ற உபகரணங்கள்(Inorganic materials)

ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்களைப் பயன்படுத்தி, சூழல்ரீதியான மற்றும் தொழில்ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வினைகளுக்கு(reactions), ஒருங்கிணைந்த உலோக கலவைகளை ஒரேவிதமான வினையூக்கிகளாகப் பயன்படுத்தும் பணியை இத்துறை செய்கிறது.

சவ்வு செயல்பாடுகள்(Membrane processes)

* உப்புநீர் பயன்பாடு

* கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பம்

* எலக்ட்ரோ டயலிஸை எதிர்மறையாக்குவதன் மூலம் மறுசுழற்சி ஆற்றலை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பலவித பணிகள் இப்பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றன.

கடல்சார் பயோடெக்னாலஜி(Marine biotechnology)

இப்பிரிவின் பீல்டு நிலையம்(field centre), தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ளது. இப்பிரிவில் 4 முக்கியப் பிரிவுகள் உள்ளன.

* மாலிக்யூலர் பயாலஜி மற்றும் பயோடெக்னாலஜி

* இயற்கைப் பொருட்கள் வேதியியல்

* கடல்செடி உயிரியல் மற்றும் பயிரிடுதல்

* கடல்சார் சூழ்நிலை போன்றவையே அந்தப் பிரிவுகள்

சவ்வு தொழில்நுட்பங்கள்(Membrane technologies)

பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இந்த நூற்றாண்டில் சவாலான ஒரு விஷயமாக இருக்கிறது. காடுகளை அழித்தல், சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்வளம் குறைதல், தொழில்மயமாக்குதல் மற்றும் நகர்மயமாக்குதல் போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள். அப்படி, தண்ணீர் கிடைத்தாலும், அது குடிப்பதற்கு ஏதுவாக இருப்பதில்லை. இந்த அபாயகரமானப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்னவெனில், கடல்நீரை அல்லது உப்புநீரை குடிநீராக்குவதுதான் ஒரே வழி.

இத்தகைய உன்னத நோக்கத்திற்கு, CSMCRI முக்கிய சேவைகளை ஆற்றி வருகிறது. அங்கே, பலவித சவ்வு தனியாக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பெரியளவில், கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள், கடற்கரைப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us