நம் நாட்டில் தரப்படும் கல்வி உதவித் தொகை பற்றி விரிவாகக் கூற முடியுமா? | Kalvimalar - News

நம் நாட்டில் தரப்படும் கல்வி உதவித் தொகை பற்றி விரிவாகக் கூற முடியுமா? நவம்பர் 08,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய தினம் கல்விக்கான கட்டணங்கள் முன் எப்போதும் இல்லாத அளவு கிடுகிடுவென்று அதிகமாகி வருவதைக் காண்கிறோம். இந்தியாவில் படிப்பதாக இருந்தாலும் சரி, வெளிநாடு சென்று படிப்பதாக இருந்தாலும் சரி, கல்விக் கட்டணம் மிக மிக அதிகம் தான்.

இன்றைய கடுமையான போட்டிகளுக்கு இடையே கல்விக்கான செலவும் இன்றியமையாத செலவாகவே கருதப்படுகிறது. ஆனால் இதற்கான கட்டணத்தை நடுத்தர வர்க்கத்தினர்எவ்வாறு செலுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்றவை கல்விக்கட்டணத்தை அதிகரித்துள்ளன.

இதன் மூலமாக வெளிநாடுகளில் படிக்க மட்டுமே அதிகம் செலவாகும் என்றிருந்த நிலை மாறி இந்தியாவிலேயே தரமான கல்வியைப் பெற வேண்டுமானால் கட்டாயம் அதிகம் செலவு செய்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே கூட சில இடங்களில் பிளஸ் 2 படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு படிப்பில் சேர்ந்து தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பின்னும் கூட நல்ல கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களைப் பெறவே அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. எம்.பி.ஏ., போன்ற போட்டி அதிகமுள்ள படிப்புகளைப் படிக்க சில நேரங்களில் 10 கல்வி நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டியிருக்கிறது.

இதற்கே அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலையில் தான் நமது பெற்றோர் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் நமது பெற்றோருக்கும் மாணவருக்கும் பயன்தரக்கூடிய கல்வி உதவித் தொகைகளைப் பார்க்கலாம். கல்விக் கட்டணங்களைப் பற்றி அறியும் போது நமது உயர்ந்த கல்வி லட்சியங்கள் விலகிச் சென்று விடும் சூழலே இன்று நிலவுகிறது. உள்நாட்டில் மற்றும் வெளி நாட்டில் படிக்க எவ்வளவு கிடைக்கும்? இது போன்ற குழப்பங்கள் பலரிடம் இருக்கிறது. இதற்கான தீர்வைத் தருவது பாங்குகளின் கல்விக் கடன் திட்டங்கள். திறமையுள்ள நல்ல மாணவர்களுக்குப் பொதுவாக கடன் பெறுவதில் பெரிய பிரச்னைகள் இருப்பதில்லை. இது குறித்து நமது ரிசர்வ் பாங்க் தெளிவான வரையறைகளை பாங்குகளுக்குத் தந்துள்ளது.

இதன்படி, குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்குக் கீழே உள்ளவர்களுக்கு Moratorium எனப்படும் காலத்தில் வட்டிச் சுமையை அரசே ஏற்றுக் கொள்வதால் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களும் இந்தக் கடன்களைப் பெறுவதில் முன்னேற்றம் ஏற்படும். இது தவிர 4 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும் போது எந்தவித ஈட்டுப் பத்திரங்களும் தேவையில்லை என்பது சிறப்பம்சமாகும். இந்தியாவில் உள்ள அரசுடைமை மற்றும் தனியார் பாங்குகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக படிப்புகளுக்கு பல்வேறு கல்விக் கடன் திட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக பாங்க் ஆப் பரோடா, பள்ளிக் கல்விக்கே கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதன் மூலம் நர்சரி பள்ளிகளில் தொடங்கி பிளஸ் 2 வரை படிப்பதற்குக் கூடி கடன் வழங்கும் வாய்ப்பை தனக்கே உரிய நிதியளிப்பு முறையில் பாங்க் ஆப் பரோடா செயல்படுத்தி வருகிறது. வேறு சில பாங்குகள் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இலகுத் தன்மை கொண்ட கல்விக் கடன்களைத் தருகின்றன.

இந்தியன் பாங்கோ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றைப் படிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்களைத் தருகிறது. இதில் 4 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு தற்போது 12.5% வட்டியும் அதற்கு மேலான கடன்களுக்கு 13% வட்டியும் பெறப்படுகிறது. இந்தப் படிப்புகள் அனைத்துமே யு.ஜி.சி., அல்லது மத்திய/மாநில அரசுகள் அல்லது ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

கல்விக் கடன்கள் என்பது பொதுவான விசயமாக இருந்த போதும், இதைத் தரும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு பொதுத் துறை பாங்க் அமெரிக்கா சென்று படிக்க ஒருவருக்கு அவரது செலவில் 60% வரை கடன் வழங்கியுள்ளது. கல்விக் கடன்கள் என்பது தற்போதைய கால கட்டத்தில் ஓரளவு எளிதானதாகவே உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us