அரிதான பாடப்பிரிவுகளும் அதை வழங்கும் கல்லூரிகளும் | Kalvimalar - News

அரிதான பாடப்பிரிவுகளும் அதை வழங்கும் கல்லூரிகளும்

எழுத்தின் அளவு :

மாணவர்கள் அரிதான பாடபிரிவுகளை தேர்வு செய்ய வசதியாக, வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ரமேஷ் பிரபா பல அறிய தகவல்களை வழங்கினார்.

புதுச்சேரியில் தினமலர் நாளிதழ் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் பிரபா, மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தவிர, 10க்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகள் உள்ளன. யுனானி, சித்தா உள்ளிட்டவை எம்.பி.பி.எஸ்.க்கு இணையான படிப்புகள்தான். இந்த கோர்சுகளில் சேர, அந்தளவிற்கு போட்டி இருப்பதில்லை.

மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்பு, நர்சிங். இந்தியாவில் நர்சிங் முடிப்பவர்களுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புள்ளது. பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) வெளி நாடுகளில் வேலை வாய்ப்புள்ள துறை. இத்தகைய கல்லூரிகள் நிறைய உள்ளன. பி.பார்ம் படிப்பும் அதிக வேலை வாய்ப்புள்ளது. சுயமாக மெடிக்கல் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியலாம். பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கண் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளும் வேலை வாய்ப்பை தரக் கூடியவைதான். கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நாமக்கல், சென்னை வேப்பேரியில் உள்ளன.

அன்னியச் செலாவணியில் முக்கியப் பங்காற்றும் மீன்வளப் படிப்புக்கான கல்லூரி தூத்துக்குடியில் உள்ளது. கோவையில் வேளாண் அறிவியல் கல்லூரி உள்ளது.

பயோ டெக், பயோ இன்பர்மேட்டிக்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேரலாம். எந்த பாடப்பிரிவு பயின்றவர்களும் சட்டப் படிப்பில் சேரலாம். டூரிசம், உளவியல் போன்ற படிப்புகளும் வேலை வாய்ப்புக்கு உகந்தவைதான். சென்னையில் திரைப்படக் கல்லூரி, ஓவியக் கல்லூரியும், மாமல்லபுரத்தில் சிற்பக் கல்லூரியும் உள்ளன.

கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவைப் பற்றி இன்னும் சரியான புரிதல் இல்லை. இப்படிப்புகள் உலகளாவிய வேலை தரக்கூடியது.

மிகப் பெரிய வேலை வாய்ப்பை தரக்கூடிய மற்றொரு துறை பேஷன் டெக்னாலஜி. இதற்கான நிறுவனம் சென்னை தரமணியில் உள்ளது. மீடியாக்கள் வளர்ந்துள்ள அளவுக்கு, அத்துறை சார்ந்து படித்தவர்கள் இல்லை. எனவே, அனைவரும் ஒரே மாதிரியான கோர்சில் சேராமல், வித்தியாசமான, அரிதான பாடப் பிரிவுகளை தேர்வு செய்து படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும். எந்தப் பாடப்பிரிவும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ இல்லை.

வேலைக்கான நேர்காணலில், பல மாணவர்கள் தோல்வியடைய காரணம், ஆளுமைத் திறன் இல்லாததுதான். படிக்கும்போதே, பேச்சுத் திறன் மற்றும் பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவரும்போது, சில இடங்களில் தற்கொலைகள் நடக்கிறது. இத் தருணத்தில், பெற்றோர்கள் மாணவர்களை கவனமாக கையாள வேண்டும். கடுமையாக கண்டிக்கக் கூடாது. இவ்வாறு ரமேஷ்பிரபா பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us