மொழிப் பாடத்தை படிப்பது தமிழுக்குச் செய்யும் தொண்டு | Kalvimalar - News

மொழிப் பாடத்தை படிப்பது தமிழுக்குச் செய்யும் தொண்டு

எழுத்தின் அளவு :

ஆர்வத்துடன் மொழிப்பாடத்தை படிப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் தொண்டாக கருத வேண்டும் என நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தம் பேசினார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், "மொழிகள் கற்றால் எதிர்காலம்" என்ற தலைப்பில் நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தம் பேசியதாவது: இங்கு வந்துள்ள பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளக்கு நல்ல துறையைத் தேர்வு செய்து சேர்த்துவிட்டால் போதும் என்று நினைக்கும் நிலைமை உள்ளது. இதற்கு தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி பெற்றோர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

உங்களிடம் தமிழ்ப் பேராசிரியராக எதிர்காலத்தில் வரவிரும்புகிறவர்கள் மட்டும் கையை மேலே தூக்க வேண்டுமென கூறியபோது ஒருவர் கூட கையைத் தூக்கவில்லை. ஆனால் டாக்டர், பொறியாளர் படிக்க விரும்புவதாக பலர் கையைத் தூக்கினர். இதற்கு காரணம் அந்தத் துறையைத் தேர்வு செய்தால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால்தான். எங்கள் காலத்தில் இதுமாதிரி வழிகாட்டி நிகழ்ச்சியை யாரும் நடத்தவில்லை.

நாங்கள் படிக்கும் போது கல்லூரி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலைமை இருந்தது. ஆனால் இன்று தினமலர் நாளிதழ் மூலம் கல்லூரி பற்றிய விபரம் வீட்டிற்கே வந்துவிடுகின்றது.

பலர் டாக்டர், இன்ஜினியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். ஆனால் ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. மொழிப்பாட ஆசிரியர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நீங்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் சினிமாவில் லூஸ்மோகன், மதன்பாபு நடிப்பது போல் இருக்கும் என்று நினைக்காதீர்கள். எனக்கு நன்கு தெரிந்த தமிழ் மொழியை படித்ததால்தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறேன். நமக்கு தெரிந்த மொழியை தேர்ந்தெடுத்து அதில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் முன்னேறி விடலாம். மொழிப்பாடத்தில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்த இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு என எந்த மொழியில் விருப்பமோ அதில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரலாம்.

அதன் பிறகு பி.எட். படித்தால் அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்கும். மொழிப் பாடம் என்பது உணர்வு பூர்வமான படிப்பாகும். மேல்நாடுகளில் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், இலக்கியத்தைக் கண்டிப்பாக சேர்ந்து படிக்க வேண்டும். ஆர்வத்துடன் மொழிப்பாடத்தை படிப்பது என்பது தமிழ்மொழிக்குச் செய்யும் தொண்டாக கருத வேண்டும்.இவ்வாறு ஞானசம்பந்தம் பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us