பயோ இன்ஜினியரிங் பெரிய வளர்ச்சியை எட்டும் | Kalvimalar - News

பயோ இன்ஜினியரிங் பெரிய வளர்ச்சியை எட்டும்

எழுத்தின் அளவு :

பயோடெக், பயோ இன்ஜினியரிங் துறை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும் என, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக பேராசிரியர் முகமது அலி கூறினார்.

புதுச்சேரியில் தினமலர் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில், "வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் பயோ டெக் மற்றும் பயோ இன்ஜினியரிங்" என்ற தலைப்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக பேராசிரியர் முகமது அலி பேசியதாவது:எந்தத் துறையில் சேர்ந்தால் சரியாக இருக்கும் என சிந்தித்து தேர்வு செய்யுங்கள்.

கண்டுபிடிப்புகள் குறித்த பயோ டெக்., (உயிரி தொழில்நுட்பம்), பயோ இன்ஜினியரிங் (உயிரி பொறியியல்) துறையில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு இத் துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்துறை அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும்.

அடிப்படை அறிவியலில் ஆர்வமும், ஞானமும் இருந்தால்தான் இத்துறையில் வெற்றி பெற முடியும். பார்மாசூட்டிகல், வேளாண்மை, மரைன், தொழிற்சாலைகள், பயோ மெடிக்கல் உள்ளிட்ட பல துறைகளில் பயோ டெக், பயோ இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. இத் துறையில் எம்.டெக்., பி.எச்டி., படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. இத்துறையில் கடின உழைப்பு இருந்தால் முன்னேறலாம்.

எய்ட்ஸ், கேன்சர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த மருந்துகள் தேவைப்படுகிறது. எனவே, இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகமுள்ளது.. ஜீன் தெரபி, ஸ்டெம்செல் கல்சர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ளது. "புட் புராசசிங்" துறை அடுத்த பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெறும். பார்மா சூட்டிகல் துறையில், உலகளவில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இவ்வாறு முகமது அலி பேசினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us