குரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா? இதில் வேலை வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

குரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா? இதில் வேலை வாய்ப்புகள் எப்படி? மார்ச் 15,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய பணிச் சூழலில் ஒருவரின் தோற்றத்துடன் அவரின் நடத்தை, ஆளுமை மற்றும் நற்பாங்கும் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது. ஏற்கனவே இவற்றை நாம் பெற்றிருந்தாலும் தேவைக்கேற்ப அவற்றை முழுமையாக மேம்படுத்திக் கொள்வதும் தேவைப்படுகிறது.

இதை நமக்கு செய்து கொடுப்பவர்கள் குரூமிங் அண்ட் எட்டிக்வசி கன்சல்டன்டுகள் என அழைக்கப்படுகின்றனர். ஒருவரின் இமேஜ் என்பது எந்த இடத்திலும் மிக மிக முக்கியமானது. இமேஜைக் கொண்டே இன்று ஒருவர் பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடிகிறது.

வார்ட்ரோப் கன்சல்டன்ட், குரூமிங் அண்ட் எட்டிக்வசி கன்சல்டன்ட், இமேஜ் கன்சல்டன்ட் போன்றவர்கள் எப்படி ஒரு சிறந்த பதிவை பிறரிடம் ஏற்படுத்த முடியும் என்பதை நன்கு அறிந்தவர்கள். குரல், இலக்கணம், வார்த்தைகள் போன்ற குரல் சார்ந்த தகவல் பரி மாற்றங்களிலும் உடல் சார்ந்த தகவல் பரிமாற்றங்களான கைகொடுத்தல், உட்காரும் நிலை, பார்க்கும் விதம் போன்றவற்றிலும் எடிக்வசி எனப்படும் சமூக நடத்தை முறைகளான உணவுப் பழக்க வழக்கம், தொலைபேசி உரையாடும் விதம் போன்றவற்றிலும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

பொதுவாக பள்ளிகளும், கல்லூரிகளும் கற்றுத்தராத பல்வேறு திறமைகளை இவர்கள் கற்றுத் தருகிறார்கள். உணவு பரிமாறப்படும் மேஜையில் நடந்து கொள்ளும் விதம், ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதம், அறிமுகப்படுத்தும் முறை போன்ற பல முறைகளில் இவர்களின் பயிற்சியானது பரந்துபட்டதாக இருக்கிறது. பொறுமை, கவனிக்கும் திறன், பரிசீலிக்கும் திறன் மற்றும் சிறந்த தகவல் தொடர்புத் திறனும் கூட அவசியமாக இத் துறையில் தனது எதிர்காலத்தை விரும்பும் ஒருவருக்குத் தேவை.

இத் துறையில் இதுவரை டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பாக முறையான படிப்புகள் தரப்படவில்லை. தனிநபர் ஆரோக்கியம், முடி, தோல், அலங்காரம், உடையலங்காரம், சமூக ஒழுங்கு முறை, வேலையிடத்திற்கான ஒழுங்கு முறை, உணவு உண்ணும் முறைகள், தகவல் பரிமாற்றம் என்று பலவாறாக இத் துறையானது பரந்து பட்டு செயல்படுகிறது.

எனவே நமது விருப்புக்கேற்ப இவற்றில் நமது பிரிவை துறை சார்ந்த தனி நபர்களிடமிருந்தே கற்றுக்கொள்ளலாம். நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே வெற்றியைத் தருவதில்லை. நல்ல பழக்கவழக்கங்களுடனும் நடத்தையுடனும் இவற்றைப் பெற்றிருப்பவர்களே வெற்றியின் விளிம்பை எட்டுகின்றனர். எனவே உயர் மட்டத்திலுள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து மட்டங்களிலும் வாழ்பவர்களுக்கான துறையாக இத் துறை வேகமாக மாறி வருகிறது.

அது மட்டுமன்றி மாறுபட்ட சூழ் நிலைகளில் நல்ல விதமாக வார்த்தெடுக்கப்பட்ட மனிதர்களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள் என்பதை இத் துறையில் அனுபவபூர்வமாக உணரலாம். நிதிச் சிக்கலில் உலகமே சிக்கி வேலையிழப்புகள் காணப்படும் இன்றைய சூழலிலும் கூட குரூமிங் மற்றும் அழகுக் கலை என்ற 2 துறைகளும் இவற்றினால் சிறிதளவு பாதிப்புக் கூட இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நல்ல தகுதிகளுடன் இத் துறையில் பயிற்சியாளராகவோ ஆசிரியராகவோ வழிகாட்டியாகவோ ஆலோசகராகவோ பணியில் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டால் அது அவருக்குப் பெரிதும் உதவும். இத் துறையினருக்கு பரந்து விரிந்த பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us