விமான பைலட் ஆவது எப்படி? | Kalvimalar - News

விமான பைலட் ஆவது எப்படி? ஏப்ரல் 26,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவின் ஏவியேசன் துறை 2 பிரிவுகளாகக் கருதப்படுகிறது. கமர்சியல் எனப்படும் நாம் பயன்படுத்தும் விமான போக்குவரத்துப் பிரிவு மற்றும் ராணுவ விமானப் பிரிவு என அவற்றைக் கூறலாம். நாம் பயன்படுத்தும் போக்குவரத்து பயணிகளுக்கான மற்றும் சரக்குப் போக்குவரத்து என 2 பிரிவுகளாக உள்ளது.

இதையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து என மேலும் பிரிக்கலாம். ராணுவ விமானப் பிரிவு என்பது இந்திய விமானப்படையின் செயல்பாடுகள், தரைப்படை மற்றும் கடற்படையின் விமான செயல்பாடுகள் என விரிந்து செயல்படுகிறது.

கமர்சியல் பிரிவு எனப்படும் சிவிலியன்களுக்கான விமானத் துறையில் ஏர்லைன்ஸ் ஆப்ரேசன்ஸ், பராமரிப்பு, மார்க்கெட்டிங், நிதிப் பிரிவுகள் உள்ளன.இவற்றில் பைலட் பணியானது ஆப்ரேசன்ஸ் பிரிவில் வருகிறது.

பைலட்டுகள் குறுகிய மற்றும் நீண்ட தூர விமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு பயணம் தொடங்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பிரீபிளைட் செக்கப் எனப்படும் பயண திட்டத்தை அவர்கள் சரி பார்த்து உறுதி செய்து கொள்கிறார்கள்.
எந்த வழியில் பயணிக்கப் போகிறோம், என்ன உயரத்தில் பறக்கவிருக்கிறோம், நிலவுகின்ற வானிலை மற்றும் தட்பவெப்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றை பைலட்டுகள் மனதில் கொள்கிறார்கள்.

விமானத்தின் டேக் ஆப் மற்றும் லேண்டிங் ஆகியவை ஒரு பைலட்டிற்கு உண்மையில் சவாலான பணிகள். இது தவிர விமானத்தின் உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் இவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள்.

விமானத்தின் எரிபொருள் போதுமானதாக இருக்கிறதா இல்லையா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். விமானத்தின் இந்த அம்சங்களை கேபினின் பிற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். பயணத்தின் போது பாசஞ்சர்களோடு அவ்வப்போது பேசி பயண நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கிறார்கள்.

கோ பைலட் எனப்படும் சக பைலட் ஒருவரோடு இணைந்து பயணத்தை வழிநடத்துகிறார்கள். இந்தப் பணிக்கு நன்னடத்தை, பொறுப்புணர்வு, காலம் தவறாமை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அடிப்படை குணாதிசயங்களைப் பெற்றிருப்பது முக்கியம். கடும் உழைப்பு, நல்ல உடற்தகுதி, விழிப்புணர்வு, அனுசரித்துப்போகும் தன்மை, அவசரச் சூழலில் யோசித்து முடிவெடுக்கும் தன்மை ஆகியவையும் அடிப்படை அம்சங்களாக தேவைப்படுகிறது. பைலட் லைசென்ஸ் என்பது 3 நிலைகளைக் கொண்டது.

ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ், பிரைவேட் பைலட் லைசென்ஸ் மற்றும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் என இவற்றைக் கூறுகிறார்கள். இது தவிர ஹெலிகாப்டர் பைலட் லைசென்ஸ் தனியாக இருக்கிறது. ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸ் இதை பைலட் கிளப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்துகின்றன.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 16 வயது நிரம்பியவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்ரூ.10 ஆயிரத்துக்கான பாங்க் கியாரன்டியை தர வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ் மற்றும் செக்யூரிடி கிளியரன்ஸ் என்னும்சான்றிதழைப் பெறுவதும் தான் இதில் முக்கியம். இதில் பைலட் ஆப்டிடியூட் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.

பிரைவேட் பைலட் லைசென்ஸ், ஸ்டூடண்ட் பைலட் லைசென்ஸைப் பெற்றவுடன் பிளையிங் இன்ஸ்ட்ரக்டர் ஒருவரின் துணையுடன் பிளையிங் பயிற்சி தொடங்கப்படுகிறது. பறப்பதன் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இருவராக 15 மணி நேரம் பறந்த பின் பயிற்சி மாணவர் முதன்முதலாக விமானத்தை ஓட்டவேண்டும்.

மொத்தம் 60 மணி நேரம் விமானம் ஓட்டிய பின் இந்த லைசென்ஸ் தரப்படுகிறது. இதில் 20 மணி நேரம் தனியாக ஓட்டுவதும் 5 மணி நேரம் கிராஸ் கன்ட்ரி பிளையிங்கும் அடங்கும். 17 வயது நிரம்பியிருப்பதும் பிளஸ் 2 முடித்திருப்பதும் முக்கியம். மிக அதிகமான செலவை உள்ளடக்கியது இந்தப் பயிற்சி. கமர்சியல் பைலட் லைசென்ஸ் மொத்தம் 250 மணி நேரம் பறந்த பின்பு இது தரப்படுகிறது.

இயற்பியல் மற்றும் கணிதத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பறப்பது தவிர எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தற்போதைய சூழலில் நாளுக்கு நாள் விமான சேவை அதிகரித்து வருவதால் பைலட்டுகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலுள்ள சில பிளையிங் கிளப்புகள் 
Flying Training Institute, Behala, Calcutta  
Government aviation Training Institute, Civil aerodrome, Bhubaneswar
Karnal Aviation Club, Kunjpura Road, Karnal, Haryana  
Government Flying Club,Aerodrome, Lucknow
School of Aviation Science and Technology, Delhi Flying Club Ltd, Safdarjung Airport, New Delhi  
State Civil Aviation, UP Govt. 
Flying Training Center Kanpur and Varanasi
Mumbai Flying Club, Juhu Aerodrome, Santa Cruz West, Mumbai  
Rajasthan State Flying School, Sanganer Airport, Jaipur
Govt. Flying Training School Jakkur Aerodrome, Bangalore  
Andra Pradesh Flying Club Hydrabad airport, Hydrabad.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us