வளமான எதிர்காலம் இணையதள இதழியலுக்கு...! | Kalvimalar - News

வளமான எதிர்காலம் இணையதள இதழியலுக்கு...!

எழுத்தின் அளவு :

கம்ப்யூட்டர் உதவியுடன் இன்று உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவரும் வித்தையை தொழில்நுட்பங்கள் வழங்கி நம்மை பிரமிக்க வைக்கின்றன. இதனால் இணையதள இதழ்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது எனில் மிகையல்ல. இதன் பயன்பாடு பத்திரிகை, வானொலி மற்றும் ‘டிவி’யை விட பன்மடங்கு பயனுள்ளதாக விளங்குகிறது.

உடனுக்குடன் செய்தி: ஆன்லைன் மூலம் உலகில் ஒரு மூலையில் நடக்கும் செய்தி மற்றும் நிகழ்வை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாகிறது. ஒரு நாளிதழை உருவாக்க ஏற்படும் சிரமங்களைவிட இணைய தள இதழில் மிககுறைவு. இதில் ஒரு செய்தி தொடர்பான அனைத்து முன்பின் நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளலாம்.

அச்சு ஊடகங்களுக்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள் ஏதும் இதற்கு இல்லை. இடப்பற்றாக்குறை, நியூஸ் பிரிண்ட் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் இல்லாததால் எவ்வளவு செய்திகளை வேண்டுமானாலும் தரலாம்.

அவற்றை சேமித்தும் வைக்கலாம். நாளிதழ்களில் ஒருநாள் வெளியான தகவல், அன்றைய நாளிதழ் நமக்கு கிடைக்கவில்லை என்றால் அதனை தேடிப்பெறுவது சிரமம். ஆனால் இணையதள இதழ்களில் பழைய தகவல்களை தேடிகண்டுபிடிக்க முடிகிறது. உண்மையில் அவை தகவல் கருவூலங்களாக திகழ்கின்றன.

தொழில்நுட்பம் உலகம் முழுவதையும் ஒரே இணைப்பில் கொண்டுவந்து விட்டது. worldwide web (www) மூலம் எந்த ஒரு நாட்டின் தகவலையும் மிக எளிதாக பெறமுடிகிறது. இதில் இ-மெயில்,சாட், இ-காமர்ஸ், இ-லேர்னிங்கை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே ஆன்லைன் இதழை கையாள முடியும்.

இணைய தள இதழ்கள் மூலம் இ-மெயில், சாட், போட்டோஷாப், மல்டிமீடியா, எப்.டி.பி., முறைகளில் உலக நிகழ்வுகளை அடுத்த வினாடியிலேயே டவுன்லோடு செய்து பெறமுடியும். உதாரணமாக தினமலர் இணையதள இதழ் மூலம் உலக தமிழ் மக்கள் அனைவரும் தமிழக நகர்,கிராமப்புற நிகழ்ச்சிகள், அரசியல், சினிமா நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ள முடிகிறது.

இணையதளத்தில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு எந்த ஒரு நாடும் பொறுப்பேற்க முடியாது. காரணம் உலகம் முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னல்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் அந்த நாட்டிலுள்ள ‘சர்வர்’களில் தகவல்களை சேமித்து வைக்கிறது. அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி எடுத்துக்கொள்ள முடியும்.

பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் ‘டிவி’கள் போன்று தகவல்களை சேகரிக்க சிரமப்பட வேண்டியதில்லை. ‘ஹைபர் பேக்ஸ்’ மூலம் கூடுதல் தகவல்களை பெறமுடியும்.

sign in முறையில் இதழுக்குள் சென்று தேவையான செய்தி, படம், வீடியோ ஆதாரங்களை பார்க்க முடியும். தேவையான தகவல்களை திரும்ப, எளிதாக இந்த முறையை பயன்படுத்தி எடுக்கலாம்.

ஆசிரியர் கடிதம், மக்களின் கருத்துக்கள், உணர்வுகள், பிரதிபலிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும் வெளிநாடுகளை போல இணைய இதழ்கள் இன்னும் பரவலாக மக்களால் நம்நாட்டில் பயன்படுத்தப்படவில்லை. இதனால் பல தளங்கள் குறைவான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

பெரு நகரங்களில் மேல்தட்டு மக்கள் மற்றும் படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இணைய இதழ்கள் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புறங்களில் விரைவில் சென்றடையும் வகையில் கட்டமைப்பு இல்லை. இருப்பினும் இதழியல் என்பது இணைய இதழியலாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

-டாக்டர் எம்.வி.நாகராஜன், ஒருங்கிணைப்பாளர், இதழியல் துறை, தொலைதுõரக்கல்வி இயக்ககம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us