வழிகாட்டியில் மாணவ, மாணவியர் குவிந்தனர் | Kalvimalar - News

வழிகாட்டியில் மாணவ, மாணவியர் குவிந்தனர்

எழுத்தின் அளவு :

பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்த, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று, பல்துறை வல்லுனர்களின் கருத்துரைகளை கேட்டறிந்தனர். ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற கல்லூரிகளின் அரங்கிற்கு சென்று, உயர் கல்வியை பற்றி ஆலோசனை பெற்றனர். இந்நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள், ஞாயிறன்று  நடக்கும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது தொடர்பான தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

முதலில், பல்வேறு கல்லூரிகள் அரங்கு அமைத்துள்ள கண்காட்சி துவக்க விழா நடந்தது. எஸ்.ஆர்.எம்., பல்கலை சர்வதேச நிகழ்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கோபால்  துவக்கி வைத்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு, சூலூர் ஆர்.வி.எஸ்., கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் முன்னிலை வகித்தனர். அவர்களுடன் கல்வியாளர் ரமேஷ் பிரபா, ஆடிட்டர் சேகர், வங்கியாளர் விருத்தாசலம், கணேஷ்  மகாதேவன் உட்பட பலர் சென்று, கல்லூரிகள் அமைத்துள்ள ஸ்டால்களை பார்வையிட்டனர். மற்றொரு அரங்கில் வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.

கண்காட்சி அரங்கம் அமைந்திருந்த ஹாலில், கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஏராளமான கல்லூரிகள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. அந்தந்த கல்லூரிகளில் பயிற்றுவிக்கும் துறைகள் குறித்த விளக்கங்களை, கல்லூரி அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். அனைத்து கல்லூரிகளும், தங்கள் கல்லூரி குறித்த விபரங்கள் அடங்கிய பிரசுரங்களை வினியோகித்தனர். கண்காட்சியை பார்வையிட்ட மாணவ  மாணவியர், தாங்கள் தேர்வு செய்த படிப்பு குறித்த விபரங்கள், கட்டணம், தேர்வு முறை,  சேர்க்கைக்கான தகுதியை கேட்டறிந்தனர்.

ஏராளமான மாணவ மாணவியர் பெற்றோருடன் வந்திருந்தனர். பலர், தங்களுடன் பயிலும் நண்பர்களுடன் வந்திருந்தனர். ஸ்டால்களை பார்வையிட்ட மாணவர்கள் குறித்த விபரங்களை, பதிவேட்டில் அலுவலர்கள் பதிவு செய்து கொண்டனர். சில கல்லூரிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அரங்கில் இலவசமாக வினியோகித்தன. பல கல்லூரிகள் தங்கள் கல்லூரியின் சிறப்பு குறித்த வீடியோ பதிவுகளையும் ஸ்டால்களில் ஒளிபரப்பினர். பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பேஷன் டெக்னாலஜி கல்லூரிகளுடன் மருத்துவ கல்லூரிகளும் தங்கள் ஸ்டால்களை அமைத்திருந்தன.

தினமலர் நாளிதழ் சார்பில் கல்வி மலர்.காம் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இணையத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது; அரங்கை பார்வையிட்ட மாணவ  மாணவியர், இணைய தளத்தில் அச்செய்தியை படித்து, ஒருவருக்கொருவர் பரிமாறிச் சென்றனர். வழிகாட்டி நிகழ்ச்சி காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us