பொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

பொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்ஜூன் 28,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்நிறுவனம், ஒரு தன்னாட்சி அமைப்பாக, கடந்த 1954ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 1953ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது நிர்வாகம் குறித்த சர்வேயின் விளைவினாலேயே இந்த நிறுவனம் உருவானது. அரசு மற்றும் இதர பொதுத்துறை அமைப்புகளில் பணிபுரியும் நபர்களின் நிர்வாகம் மற்றும் ஏனைய திறன் மற்றும் பண்புகளை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வது இதன் முக்கியப் பணியாக உள்ளது.

இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள்

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், 4 விதமான ஒருங்கிணைந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை, ஆராய்ச்சி, பயிற்சி, ஆலோசனை சேவைகள் மற்றும் தகவல் பரப்புதல் போன்றவையாகும்.

இந்நிறுவனத்திலுள்ள துறைகள்

பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், பொருளாதாரம், சட்ட மேலாண்மை, நடத்தை அறிவியல்(behavioural science), கிராமப்புற படிப்புகள், நகர்ப்புற படிப்புகள், சமூகவியல், கொள்கை அறிவியல், சுற்றுச்சூழல், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பலவிதமான துறைகள் உள்ளன.

நெட்வொர்க் மற்றும் ஒத்துழைப்பு

இந்நிறுவனத்திற்கு சுமார் 10,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 100 பேர் வெளிநாட்டவர்கள். இதற்கு 19 மண்டல கிளைகளும், 45 உள்ளூர் கிளைகளும் உள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு, பொது நிர்வாகம் பற்றிய தற்போதைய நடைமுறைகள், புதிய புதிய மாற்றங்கள் மற்றும் உத்திகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

அமைவிடம்

டெல்லியின் இந்திரபிரஸ்தா எஸ்டேட்டில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. இங்கிருந்து, டெல்லி விமான நிலையம் 25 கி.மீ. ஆனால் டெல்லியின் பலவித ரயில் நிலையங்களிலிருந்து இது மிகவும் அருகில்தான் உள்ளது.

வளாகம்

மொத்தம் 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. நவீன கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைக் கொண்ட வகுப்பறைகள் உள்ளன. மேலும், சிறப்பான கணினி மையமும், பன்முக வசதிகளைக் கொண்ட நூலகமும் உள்ளன.

தங்குமிட வசதி

சுமார் 70 அறைகளைக் கொண்ட விடுதியும், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன.

பிரதான அம்சங்கள்

பொது நிர்வாகத்திற்கான இந்திய கல்வி நிறுவனம் என்பது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுயாட்சிக் கல்வி நிறுவனமாகும். பொது நிர்வாகம் தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் தகவல் பரப்பல் போன்ற பணிகளில் இந்நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவால், ஏற்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிறுவனமாகும் இது. பொது நிர்வாகம் தொடர்பான பயிற்சிக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்றதொரு உலகளாவிய நிறுவனமாக இது இன்றைய நிலையில் அறியப்படுகிறது.

சொசைட்டீஸ் பதிவுச் சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிறுவனம். இந்திய ஜனாதிபதி, இந்நிறுவனத்தின் புரவலராகவும், துணை ஜனாதிபதி, இந்நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார்கள். மற்றபடி, இந்நிறுவனத்தை நிர்வகிக்க, இயக்குநர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

முக்கியப் பணிகள்

அரசுகளுடன் தொடர்பை அதிகப்படுத்தி மேம்படுத்தல், பொது நிர்வாகத்தில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் பொது நிர்வாகம் தொடர்பாக பல படிப்புகளை நடத்துதல், செமினார்கள், மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகள், பொது விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துதல் ஆகியவை இதன் முக்கியப் பணிகளாக உள்ளன.

மேலும், ஜர்னல்கள், செய்திக் கடிதங்கள், ஆராய்ச்சி பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்நிறுவனத்தைப் பற்றி மேலும் ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ள http://www.iipa.org.in/about.html என்ற இணையதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us