ஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா? | Kalvimalar - News

ஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா? ஆகஸ்ட் 03,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆப்டோமெட்ரி என்பது மனிதர்களின் கண் பார்வை தொடர்புடைய பரிசோதனை, நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை, நோய்களைக் கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய துறை. இத் துறையை வேறு மாதிரியாகவும் கூறலாம். ஒரு தனி மனிதருக்கு பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை விலக்கி, பார்வையை முன்னேற்றம் தொடர்புடைய உபகரணங்களாகிய லென்ஸ், கண்ணாடி போன்றவற்றைப் பற்றிய அறிவியலின் பிரிவு என்று இதைக் கூறலாம்.

இந்தியாவின் முதல் 10 முன்னணி வருமானம் ஈட்டும் பணிகளில் இத் துறை ஒன்றாக திகழ்கிறது. புவியியல் ரீதியாக பல இடங்களில் பணி புரியும் வாய்ப்பு, நிலையான வேலை, பணியில் இலகுத் தன்மை போன்ற சிறப்பம்சங்களை இத் துறை கொண்டுள்ளது. இத் துறையில் ஈடுபாடு, நல்ல கல்வித் தகுதி, பிறருக்கு உதவும் எண்ணம் போன்றவையிருந்தால் இத் துறையில் இணையலாம்.

இத்துறை சவால்களையும், சாதனைகளையும், உதவுவதன் மூலமாகக் கிடைக்கும் நற்பெயரையும், தனி நபர் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நிறைவைத் தரும் துறையாக இருக்கிறது. நமது தன்மைக்கேற்ற பிரிவைத் தேர்வு செய்யும் வாய்ப்பு, இலகுத் தன்மை கொண்ட பணி நேரம், சுகாதாரத் துறையின் உட்பிரிவாக இருப்பது ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் எனலாம்.

ஆப்டோமெட்ரி துறையில் டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பில்., போன்ற பல நிலைகளில் படிப்புகள் உள்ளன. டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., ஆப்டோமெட்ரி படிப்பில் சேர +2 குறைந்த பட்ச தகுதியாக இருக்கிறது. இதற்கு பிளஸ் 2ல் அறிவியல் புலத்தில் இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகும்.

தகுதியில் கல்வி நிறுவனங்களுக்கிடையே மாறுபட்ட தேவைகள் இருக்கின்றன. சில கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு அடிப்டையிலும் ஏனைய நிறுவனங்கள் மதிப்பெண் அடிப்படையிலும் நடத்துகின்றன. முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியமாகும். அறிவியல் பிரிவு பட்டம் படித்திருப்பவர்களுக்கு இதில் முன்னுரிமை தரப்படுகிறது.

ஆப்டோமெட்ரியில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு துறையில் இளநிலை பட்டப்படிப்பும் ஆய்வுப் படிப்புக்கு முதுநிலை பட்டப்படிப்பும் முடித்திருக்க வேண்டும். ஆப்டோமெட்ரி படித்தவருக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான கிராக்கி இருக்கிறது. ஆப்டோமெட்ரி படித்தவர்கள் தனியாகவும் கண் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்தும் ஆசிரியராகவும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபடலாம். ஆப்டோமெட்ரி படித்தவர்கள் பின்வரும் பணிகளில் ஈடுபடலாம்.

மரபுரீதியான பார்வைக் கோளாறுகள் மற்றும் பகுதியான பார்வைக் குறைபாடுள்ளவர்களை மனரீதியாக குணப்படுத்தவும் இத் துறை பெரும் பங்காற்றிவருகிறது. இத் துறையில் இணைபவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் பெறுவதுடன் சமுதாயத்திற்குப் பணியாற்றும் தன்னிறைவையும் பெற முடிகிறது. இத் துறையில் எந்த நிறுவனத்தில் அல்லது பிரிவில் பணியாற்றுகிறோமோ அதைப் பொறுத்தே நமது வருமானம் அல்லது சம்பளம் அமைகிறது.

பொதுவாக முதல் 2 ஆண்டு பணியில் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.4 லட்சம் வரை பெற முடிகிறது. ஆனால் தனியார் மருத்துவமனை, சுகாதார மையம், கண் மருத்துவமகைளில் தரப்படும் சம்பளம் இதை விட அதிகமாகவே இருக்கிறது. சென்னை சங்கர நேத்ராலயா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்ள மையங்களில் இப் படிப்புகளைப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us