எனது பெயர் முத்துக்குமார். எனக்கு பைலட்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், இந்தியாவிலிருக்கும் பைலட் பயிற்சி நிறுவனங்கள் பற்றியும் விபரம் வேண்டும். | Kalvimalar - News

எனது பெயர் முத்துக்குமார். எனக்கு பைலட்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், இந்தியாவிலிருக்கும் பைலட் பயிற்சி நிறுவனங்கள் பற்றியும் விபரம் வேண்டும்.ஜனவரி 18,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பைலட் ஆவதற்கான தகுதிகள்

* பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

* தனியார் பைலட் உரிமம் பெற குறைந்தபட்சம் உங்களுக்கு 16 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதேசமயம், கமர்ஷியல் பைலட் உரிமம் பெற 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

* உங்களது ஒரு கண்ணில் பார்வை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவான மருத்துவ மொழியில், இது 6\6 கண்பார்வை என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு கண்ணில் 6\9 என்ற அளவில் குறைபாடு இருக்கலாம். ஆனால் இது 6\6 என்ற நிலைக்கு சரிசெய்யப்பட வேண்டும்.

* பொதுவான உடற்தகுதி என்பது கட்டாயம் தேவை. வழக்கமான வாழ்க்கை முறையை பாதிக்கும் எந்த வியாதியும் உங்களுக்கு இருக்கக்கூடாது.

மாணவர் பைலட் உரிமம்

* ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டியரோலஜி மற்றும் ஏர் நேவிகேஷன் மற்றும் ஏர் டெக்னிக்கல் ஆகியவைக் குறித்த தியரி நிலையிலான எழுத்துத் தேர்வை நீங்கள் எழுதித் தேற வேண்டும்.

* சிவில் ஏவியேஷன் தலைமை இயக்குநரால் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களிடம், உடற்தகுதிச் சான்றுகளைப் பெற்றிருக்க வேண்டும். டெல்லியிலுள்ள ஏர் போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டப்லிஷ்மென்ட் மற்றும் பெங்களூரிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் ஏவியேஷன் மெடிசின் என்ற 2 அமைப்புகள்தான் இதுதொடர்பான மருத்துவ தகுதிச் சான்றிதழை வழங்குவதற்கு உரிமைப் பெற்றவை.

* நீங்கள் செக்யூரிட்டி கிளியரன்ஸ் பெறுவதும் கட்டாயம்.

* வாய்வழித் தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நீங்கள் கலந்துகொள்ள வேண்டியிருக்கும்.

* மருத்துவ தகுதிகள் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி ஆகிய இரண்டையும் நீங்கள் பெற்றுவிட்டால், உங்களுக்கு மாணவர் பைலட் உரிமம் கிடைத்துவிடும்.

தனியார் பைலட் உரிமம்

* மாணவர் பைலட் உரிமத்தைப் பெற்றபிறகு, ஒரு இன்ஸ்ட்ரக்டர் ஒதுக்கப்பட்டு, உங்களுக்கு பறத்தல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும். பறத்தலின் அடிப்படைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தரப்படும் மற்றும் உங்களுடன் விமானத்தில் இன்ஸ்ட்ரக்டரும் வருவார்.

* இன்ஸ்ட்ரக்டருடன் சேர்ந்து 15 மணிநேரங்கள் பறந்த பின்பு, நீங்கள் தனியாக பறக்க(நாட்டின் எல்லையைத் தாண்டுவது உட்பட) அனுமதிக்கப்படுவீர்கள்.

* தனியார் பைலட் லைசன்ஸ் பெறுவதற்கு, நீங்கள் 60 மணிநேரங்கள் பறந்திருக்க வேண்டும். இதில், 20 மணிநேரங்கள் தனியாகவும், 5 மணிநேரங்கள் நாடு தாண்டிய வான்வெளியிலும் பறந்திருக்க வேண்டும்.

* ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டியோராலஜி, ஏர் நேவிகேஷன், ஏர்கிராப்ட் இன்ஜின்ஸ் மற்றும் சீமேன்ஷிப் ஆகியவைத் தொடர்பான எழுத்துத் தேர்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்.

* உடல் தகுதிக்கான சான்றிதழை ஏஎப்சிஎம்இ அல்லது ஐஏஎம் ஆகிய அமைப்புகளிடமிருந்து பெற வேண்டும்.

* நீங்கள் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

* இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் கூடிய 12ம் வகுப்பை நீங்கள் முடித்திருக்க வேண்டும்.

கமர்ஷியல் பைலட் உரிமம்

* இந்த வகை உரிமம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

* இந்த உரிமத்தைப் பெற ஒருவருக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* இந்தவகை உரிமத்தைப் பெற நீங்கள் குறைந்தது 250 மணி நேரங்கள் பறந்திருக்க வேண்டும். இதில், 150 மணிநேரங்கள் தனியாகவும், 25 மணிநேரங்கள் நாட்டு எல்லைக்கு வெளியிலும், 10 மணிநேரங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் முறையிலும்(ஒரு பைலட் ஆகாயத்தைப் பார்க்காமலும், வெளி உதவியைப் பெறாமலும், முற்றிலும் விமானத்தின் உபகரணங்களை மட்டுமே துணையாகக் கொண்டு பறத்தலே இந்த வகையாகும்), 5 மணிநேரங்கள் இரவிலும் பறந்திருக்க வேண்டும்.

* மேலும், ஏசிஎப்எம்இ அல்லது ஐஏஎம் போன்ற அமைப்புகளிடமிருந்து மருத்துவ தகுதி சான்றிதழ் பெறுதல், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் மெட்டியோராலஜி, ஏர் நேவிகேஷன், டெக்னிக்கல் மற்றும் பிளானிங் ஆகிய அம்சங்களில் எழுத்துத் தேர்வை எழுதுதல் போன்றவை இந்த செயல்பாட்டில் அடங்கும்.

* 15 மணிநேர தனியான பறத்தலுடன், மொத்தம் 40 மணிநேரங்கள் பறந்திருந்தால், நீங்கள் தனியார் ஹெலிகாப்டர் உரிமத்தைப் பெற முடியும். அடிப்படை ஏவியேஷன் பாடங்களைப் பற்றிய எழுத்துத் தேர்வையும் இதற்காக எழுத வேண்டும்.

* கமர்ஷியல் ஹெலிகாப்டர் உரிமத்தைப் பெற, உங்களுக்கு 60 மணிநேர விமானப் பறத்தல் பயிற்சி வேண்டும் மற்றும் தேவையான எழுத்துத் தேர்வையும் எழுதியிருக்க வேண்டும்.

* ஹெலிகாப்டர் பைலட்டுகளை பொது மற்றும் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் ஆகியவை பணிக்கு அமர்த்துகின்றன.

கூடுதல் பயிற்சி மற்றும் தகவல்

கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்றவுடன், மல்டி இன்ஜின் பயிற்சிகளைப் பெறுவதற்கு நீங்கள் விரும்பலாம்.

ஒரு குறிப்பிட்ட விமானத்தில், 7-10 மணிநேரங்கள் வரை மல்டி இன்ஜின் பயிற்சியை முடித்தப்பிறகு, உங்களது உரிமத்தில் நீங்கள் பறந்த விமானத்தைப் பற்றிய மேற்குறிப்பு எழுதப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துவகை உரிமங்களும் சரியான காலகட்டங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவ பரிசோதனை நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உங்களது உரிமம் காலாவதியான பின்பாக, குறைந்தது 1மணிநேரம் நீங்கள் பறந்தாலும்கூட, பிறகு, வாழ்க்கையில் எப்போதுமே பறக்கமுடியாத வகையில் தடைவிதிக்கப்படும்.

61 வயதுவரை பணியில் இருந்தாலும், விதிமுறைகளுக்குட்பட்ட மருத்துவ சோதனை மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய நிபந்தனைகளை ஒருவர் கட்டாயம் பூர்த்திசெய்ய வேண்டும்.

தனியார் விமான அகடமி பட்டியல்

* சிம்ஸ் ஏவியேஷன் அகடமி

* அகமதாபாத் ஏவியேஷன் அண்ட் ஏரோநாடிக்ஸ் - அகமதாபாத்

* அகடமி ஆப் கார்வெர் ஏவியேஷன் - பெல்காம், கர்நாடகா.

* ப்ளைடெக் ஏவியேஷன் அகடமி - ஹைதராபாத்

* கார்க் ஏவியேஷன் - கான்பூர், உத்திரபிரதேசம்

* எச்ஏஎல் ரோட்டரி விங் அகடமி - பெங்களூர்

* ராஜ்புதனா ஏவியேஷன் அகடமி - கோட்டா, ராஜஸ்தான்

* ஓரியண்ட் பிளைட் ஸ்கூல் - புதுச்சேரி

* விங்ஸ் ஏவியேஷன் - ஹைதராபாத்

* யாஷ் ஏர் - இந்தூர், மத்தியபிரதேசம்

* ப்ராங்க் ஏர்வேஸ் - இந்தூர், மத்தியபிரதேசம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us