இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய் | Kalvimalar - News

இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்

எழுத்தின் அளவு :

பாலிவுட் சினிமா பிரபலமும், விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் எனும் சினிமாப் பள்ளியின் நிறுவனருமான சுபாஷ் காய் அளித்தப் பேட்டி;

ஒரு நல்ல படத்தயாரிப்பாளருக்குத் தேவையான முக்கியமான பண்புகளும், தகுதிகளும் எவை?

ஒரு படத்தயாரிப்பாளரின் பணியானது, முடிவற்று செல்லக்கூடியது. படம் எடுப்பதற்கான நிதி திரட்டுவதிலிருந்து, விநியோகப் பணியை மேற்கொள்ளல், நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், ஒலிப்பதிவு, விசுவல் மிக்சிங் மற்றும் சினிமாட்டோகிராபி போன்ற பணிகளை மேற்பார்வையிடல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை, ஒரு படத்தயாரிப்பாளர் மேற்கொள்கிறார். எனவே, அவருக்கு, கலைத்திறன் மற்றும் தொழில்நுட்பத் திறன் இருப்பதோடு, எண்ணங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் திறனும் இருத்தல் வேண்டும்.

படைப்பாக்கத்திறன், ஆர்வம், ஊக்கம், கவனம், நுண்உணர்வு, சுய ஒழுக்கம், பொறுமை மற்றும் தீர்க்கமான எண்ணம் உள்ளிட்டவை, படத் தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்களில் சில. கூடுதலாக, அற்புதமான முறையில் கதை சொல்லும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் இயக்குநராக ஆனது எப்படி?

நான் இயக்குநராக ஆனது அதிர்ஷ்டத்தின் காரணமாகவோ அல்லது விதியின் காரணமாகவோ இருக்கலாம். நான் ஒரு நடிகராக ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கையில், எழுதும் பணி, என்னைத் தேடி வந்தது. எனவே, நான் அதைப் பிடித்துக் கொண்டேன். ஒருசமயம், பெரிய படத் தயாரிப்பாளராக இருந்த என்.என்.சிப்பியிடம் ஒரு கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். எனது கதையும், நான் அதை சொன்ன விதமும், அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, எனக்கு இயக்குநர் வாய்ப்பை அவர் அளித்தார்.

அந்த தருணம் எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. நான் எதிர்பார்த்த, என் வாழ்நாளின் மிகப்பெரிய வாய்ப்பு அது. நான் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, கலிச்சரன் என்ற படத்தை இயக்கினேன். அப்படம் சூப்பர் ஹிட்டானது.

உங்களின் தொழிலுக்கு, முறையான கல்வி என்பது எந்தளவிற்கு முக்கியமானதாக இருந்தது?

படத்தயாரிப்பு என்பது ஒரு கலைநுட்பம். ஒருவர் அதில் கவனம் பிசகாமல் பணிசெய்ய வேண்டும். இத்துறைக்கு புதிதாக வரும் எவருக்கும், முறையான கல்வி மற்றும் பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கல்வியும், தொழில்நுட்ப பயிற்சியும் தந்த அடிப்படைதான், எனது திறமைகளை செம்மையாக்க உதவியது. FTII (Film and Television Institute of India) என்பது எனது இரண்டாவது வீடு. அந்தக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களிடமிருந்து நான் நிறைய அம்சங்களைக் கற்றுக் கொண்டேன்.

கடந்த சில பத்தாண்டுகளாக, ஆடியோ-விசுவல் துறை எந்தளவிற்கு வளர்ந்துள்ளது?

இத்துறையில், ஒரு அசுர வளர்ச்சி இருந்து வருகிறது என்பது நிச்சயம். ஆனால், இந்தயாவைப் பொறுத்தவரை, திரைத்துறை கல்வி என்பது, மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். தற்போதைய நிலையில், மிகக் குறைந்த கல்வி நிறுவனங்களே, இத்துறையில் செயல்படுகின்றன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில், இத்துறை பெரிய வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

திரைத்துறை கல்வியின் நிலைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?

தங்களின் மாணவர்களுக்கு தரமான கல்விதான் அளிக்கப்படுகிறதா என்பதைப் பற்றி, திரைத்துறை கல்வியாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். இத்துறையில் வழங்கப்படும் குறுகியகால மற்றும் பகுதிநேர படிப்புகள், அரைகுறையான நிபுணர்களை உருவாக்குவதால், நிலைமை இன்னும் மோசமாகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 100 சினிமா கல்வி நிறுவனங்களாவது தேவை என்று நான் நினைக்கிறேன். இதன்மூலம், சிறந்த படைப்பாக்கத் திறனை வழங்கி, அரைகுறைத்தனத்தை போக்க முடியும். Whistling Woods International(WWI) என்ற எங்களின் கல்வி நிறுவனம், உயர்வகை நடைமுறைத்தன்மை வாய்ந்த படத்தயாரிப்பு படிப்பை வழங்குகிறது. மொத்தம் 3200 மணிநேர வகுப்பில், மாணவர்கள், திரைப்பட கருத்தாக்கம், வரலாறு மற்றும் அப்ரிசியேஷன் ஆகியவற்றையும் கற்கிறார்கள். ஆனால், அந்த 2 ஆண்டுகளில், 6 திரைப்பட ப்ராஜெக்ட்களின் ஒரு பகுதி அது.

WWI எவ்வாறு துவக்கப்பட்டது? இத்தனையாண்டுகளில் இது எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது?

முந்தைய நாட்களில், பல ஸ்டூடியோக்கள் இருந்தன. ஆனால், தொழில் நுணுக்க பயிற்சிகளை வழங்கக்கூடிய தேவையான கல்வி நிறுவனங்கள் இருக்கவில்லை. படத் தயாரிப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அடுத்த தலைமுறை திரைப்பட நிபுணர்களை உருவாக்கும் வகையில், ஒரு சிறந்த திரைத்துறை கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது.

ஒரு விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, உலகின் பல சிறந்த திரைத்துறை கல்வி நிறுவனங்களின் அடிப்படைகளைப் பின்பற்றி, நானும், என் மகளும் சேர்ந்து WWI -ஐ உருவாக்கினோம். மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையில், மாணவர்கள் சிறப்பான பயிற்சியையும், கல்வியையும் பெறும் வகையில், இந்த கல்வி நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம்.

இக்கல்வி நிறுவனத்தில் படித்து வெளியேறும் ஒரு மாணவர், திரைத்துறையில் நல்ல நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார். எங்களின் பழைய மாணவர்கள் 800 பேர், தற்போது சினிமாத்துறையில் பணியாற்றிக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆனால் நல்ல திறமையுள்ள மாணவர்கள், உங்களின் கல்வி நிறுவனத்தில் படிக்க முடியுமா?

வசதியுள்ளவர்கள்தான், எங்களின் கல்வி நிறுவனத்தில் படிக்க முடியும் என்பது ஒரு தவறான கருத்தாக்கம். நாங்கள் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வைத்துள்ளோம். எங்களிடம் படிக்கவரும் மாணவர்களில் 85% பேர் லோன் மூலமாக வருகிறார்கள். அவர்கள், படிப்பை முடிக்கும் முன்பேயே, பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

தோல்விகளை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

கிஸ்னா மற்றும் யுவ்ராஜ் ஆகிய படங்கள் ஏன் தோல்வியடைந்தன என்று நான் கேட்டிருக்கிறேன். நாம் திரைத்துறையின் உச்சத்தில் இருக்கையில், வெகுஜன ரசனையிலிருந்து வேறுபட்ட சில வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு ஏற்படும். அந்த வகையில்தான் எனக்கும் நேர்ந்தது. ஆனால், மேலே சொன்ன எது படங்கள், அன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், அதற்காக அந்தப் படங்களை எடுத்ததற்காக நான் வருத்தப்படவுமில்லை.

திரைத்துறை சாராத பின்னணிகளிலிருந்து, இத்துறைக்கு வரும் நபர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

திரைத்துறையானது, மிக அதிகளவிலான போட்டிகளைக் கொண்டது, அதேசமயம், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் கொண்ட ஒரு துறையாக இது விளங்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில், ஆண்டுதோறும், ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. எனவே, புதிய நபர்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.

நன்றி: கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us