டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உயர்கல்வி புரட்சி: பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் | Kalvimalar - News

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உயர்கல்வி புரட்சி: பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர்

எழுத்தின் அளவு :

இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் மெரில் டினிஸ் அளித்தப் பேட்டி.

மேற்படிப்பிற்காக, இந்தியாவிலிருந்து, அதிக மாணவர்கள் பிரிட்டன் செல்வதை நீங்கள் காண்கிறீர்களா?

கடந்த சில ஆண்டுகளாக, அதிகளவிலான மாணவர்கள், இந்தியாவிலிருந்து, உயர்கல்விக்காக பிரிட்டன் சென்றுள்ளனர். அதிக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளிவந்தது போன்ற பல காரணங்களை இதற்கு சொல்லலாம். இதேநிலை எதிர்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் போதிய இடம் தர முடியாத நிலையில், இந்திய பல்கலை அமைப்பு இருக்கிறது. இந்தியாவில், இளைஞர்களின் மேல் சுமத்தப்படும் அழுத்தம் மிக அதிகம். இங்கே, நுழைவுத்தேர்வுகளில் இளைஞர்கள் பெறும் மதிப்பெண் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.

மேலும், ஒரு சர்வதேச பல்கலையிடமிருந்து பெறக்கூடிய தரம் வாய்ந்த பட்டம், அவர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை உருவாக்கித் தரக்கூடியதாய் இருக்கிறது. இதைத்தவிர, பல பெரிய நிறுவனங்கள், நல்ல சர்வதேச பல்கலையில் பட்டம் பெற்றவர்களையே, பணிக்கு எடுக்க விரும்புகின்றன.

இன்றைக்கு, பலவிதமான ஆங்கில மொழித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. IELTS மீதான இவற்றின் தாக்கம் என்ன?

ஆங்கிலம் பேசும் நாட்டில் நீங்கள் படிக்கச் சென்றாலும் சரி, உங்களின் ஆங்கில அறிவை சோதனை செய்ய விரும்பும் நாட்டில் படிக்க சென்றாலும் சரி, உலகெங்கிலும், பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகளால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு மதிப்பீட்டுத் தேர்வாக IELTS திகழ்கிறது.

இத்தேர்வு, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் IDP ஆகியவற்றின் கூட்டிணைப்பாகும் மற்றும் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு திறன்களை இத்தேர்வு மதிப்பிடுகிறது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவில் கணினி அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படும் என்று நம்புகிறோம்.

அடுத்து வரும் காலங்களில், இந்தியாவில், பிரிட்டிஷ் கவுன்சில் செய்யப்போகும் பணிகள் என்னென்ன?

கடந்தாண்டு, நாங்கள், Re-Imagine India என்ற ப்ராஜெக்டை மேற்கொண்டோம். இதன்மூலம், இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான 21ம் நூற்றாண்டுக்கான கலாச்சார ஒருங்கிணைப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தோம். பல பரிந்துரைகள் இதன்மூலம் பெறப்பட்டன.

அவற்றில் ஒன்று, பிரிட்டன் இளைஞர்கள் இந்தியாவின் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள் மற்றும் இந்திய இளைஞர்கள், இன்றைய பிரிட்டனின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது. எனவே, இதனடிப்படையில், கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பாக நம்மால் நிறைய செய்ய முடியும்.

எனவே, நாம், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்கு வெளியே நிறைய செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயம், எப்படி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் மக்களுடன் செயல்பட முடியும் என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், டிஜிட்டல் யுகத்தில் அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

உங்களின் டிஜிட்டல் முன்முயற்சிகள் என்னென்ன?

முந்தைய நாட்களில், இந்தியாவில், ஆங்கிலம் என்பது ஒரு கெளரவ சின்னமாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய நிலையில், அதன் தேவை பல பரிணாமங்களை எடுத்துள்ளது. சமூக காரணங்கள், கல்வித் தொடர்பான தேவைகள், வேலை வாய்ப்புகள், பல உலகளாவிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளுதல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இடம் பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆங்கிலத்தை அனைவரும் நாடத் தொடங்கியுள்ளனர்.

எனவே, எங்களின் இணையதளத்தில், ஆங்கிலத்தை கற்பவர்கள் மற்றும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆகிய இருவரும் பயன்பெறும் வகையில், பல ஆன்லைன் பாடத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், சில மொபைல் Product -களையும் வழங்குகிறோம். இதைத்தவிர, சமீபத்தில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன், Cricket - English Strokes முறையில், ஒரு ஆங்கிலப் பாடத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

எங்களிடம், Job Seekers என்ற பெயரில் வேறொரு திட்டமும் உள்ளது. இதன்மூலம், இளைய தலைமுறையினர், நேர்முகத் தேர்வு மற்றும் பணி விண்ணப்பங்கள் தொடர்பாக நிறைய நன்மைகளைப் பெற முடியும்.

ஆங்கில மொழியை ஆன்லைனில் கற்கும் நடைமுறை பிற்காலத்தில் பெரிய வளர்ச்சியை அடையுமா?

ஆன்லைன் கல்வி முறையானது, படிப்பை வழங்கும் முறை மற்றும் பட்டங்கள் வழங்கும் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மக்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை, இதன்மூலம் தேர்வுசெய்ய முடியும். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் ஒரு புரட்சியை நாம் எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

திறந்தநிலை பல்கலை முறையில், பிரிட்டனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரிக்கும். FutureLearn என்ற செயல்திட்டத்தின் மூலமாக, 18 பிரிட்டன் பல்கலைகள், தங்களின் படிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளன.

இது ஒரு நெருக்கடியான நேரமாக இருந்தாலும், எதிர்காலத்தில், நமக்கான வாய்ப்புகள் சிறப்பாகவும், தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்பது என் கணிப்பு.

நன்றி: கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us