வெறும் தகுதிநிலை என்பது படைப்பாக்கத் திறனுக்கு எதிரி: விஞ்ஞானி யஷ்பால் | Kalvimalar - News

வெறும் தகுதிநிலை என்பது படைப்பாக்கத் திறனுக்கு எதிரி: விஞ்ஞானி யஷ்பால்

எழுத்தின் அளவு :

விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழும் பேராசிரியர் யஷ்பால், இந்தியாவின் பல்கலைகள் நிலை குறித்து அளித்தப் பேட்டி.

இந்தியாவில் உலகத் தரத்தில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

இது பதில் சொல்வதற்கு கடினமான ஒரு கேள்வி. ஒரு நல்ல பல்கலைக்கழகம் என்பது, அங்கே படிக்கும் ஒவ்வொரு மாணவரும், புதிய விஷயங்களில் ஈடுபடும் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்கும் முயற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் சூழலைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இத்தகைய சூழல்களை, வெகுசில பல்கலைகளேக் கொண்டுள்ளன. அதேசமயம், இந்தியாவில் உள்ள சில பல்கலைகள், உலகத்தரம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளன.

அதிகளவில் பணத்தை முதலீடு செய்தால், ஒரு பல்கலை, உலகத்தரம் என்ற நிலையை அடைந்துவிட முடியுமா?

ஒரு பல்கலை, உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் முயற்சிக்கு, பணம் என்பது ஒரு முக்கியத் தேவைதான். ஆனால், அதைவிட முக்கிய தேவை என்னவெனில், உந்துதல். இந்தியாவில் இருக்கும் பல தனியார் பல்கலைகளில், ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதை வைத்து, அவற்றை உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள் என்று சொல்ல முடியாதல்லவா?

நோபல் பரிசு பெற்றவர்கள், ஒரு பல்கலையை உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்குவார்களா?

ஒரு கல்வி நிறுவனத்தில், நல்ல அமைப்பை முறையை நாம் பெற்றிருந்தால், அங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக வளர்ச்சியடைவார்கள். அதேசமயம், வெறுமனே, அதிக பட்டங்கள், உதவித்தொகைகள், பதக்கங்கள் ஏன், நோபல் பரிசுக்கூட பெற்ற நபர்களை வைத்திருக்கும் ஒரு பல்கலையை, உலகத்தரம் வாய்ந்த பல்கலை என்று கூறிவிட முடியாது.

நோபல் பரிசு வெற்றியாளரை பெற்றிருப்பதால் மட்டுமே, ஒரு பல்கலை புதிய விஷயங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று அர்த்தமல்ல. இதுவரை செய்யப்படாத, முயற்சிக்கப்படாத விஷயங்களை மேற்கொள்வதே முக்கியம்.

தகவல் வளம் பெரியளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று அனைத்து இடங்களிலும் பேச்சு நிலவுகிறது. ஆனால், அந்த தகவல்களுடன், அறிவும் சேர்ந்து எந்தளவு மேம்படுகிறது என்பதே முக்கியம்.

ஒரு நல்ல பல்கலையை உருவாக்குவதில், உள்கட்டமைப்பு வசதிகளின் பங்களிப்பு என்ன?

எந்தப் பல்கலையாக இருந்தாலும், நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிதும் துணைபுரியும். எனவே, உலகத் தரம் வாய்ந்த அளவில் ஒரு பல்கலையை உருவாக்குவதில், உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம்.

பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் பெற்று திகழ வேண்டும் என்ற கருத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆம், நிச்சயமாக. அனைத்து கல்விச் சாலை பணிகளும் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், எந்தக் கேள்வியையும் சுதந்திரமாக கேட்க வேண்டும். எந்த விஷயமும் ஆழமாக சிந்திக்கப்படும் நிலைமை இருக்க வேண்டும்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த நபர்களை, ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, அங்கே பல்வேறான பரீட்சார்த்த முயற்சிகள் இருந்தன. அதேசமயம், அகடமிக் மற்றும் சுயாட்சி அம்சங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, ஏதேனும் ஒரு பல்கலையில், இதை நாம் சாதிக்க முடியாது. பெளதீக வளப் பற்றாக்குறை அல்லது அறிவு வளப் பற்றாக்குறை அல்லது நிதிப் பற்றாக்குறை ஆகிய ஏதேனும் ஒரு தடை குறுக்கே நிற்கும்.

இன்னொரு பிரதான பிரச்சினை என்னவெனில், ஒவ்வொரு பல்கலையும், வெவ்வேறான நபர்களால், வெவ்வேறு நோக்கங்களைக்கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. பல்கலை நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்தால், அவர்கள் சரியாக பணி செய்ய மாட்டார்கள், அசட்டையாக இருந்து விடுவார்கள் என்று அர்த்தமல்ல.

அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சுதந்திரமாக செய்வார்கள், அவ்வளவே. பல்கலை என்பது, ஒவ்வொருவரும் தத்தமது பணியில் சந்தோஷமாக ஈடுபடும் சூழலைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்களின் பணியை சுயமாக செய்பவர்களாக இருக்க வேண்டும். நெருக்கடியிலோ, அழுத்தத்திலோ இருக்கக்கூடாது.

நாட்டிலுள்ள முதன்மை பல்கலைகள், ஒரு பேராசிரியருக்கு தலா 3.1 என்ற அளவில் வெளியீடுகளை அளிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் இதர பல்கலைகளில் வெகுசில மட்டுமே, இந்த நிலையை அடையக்கூடியதாக உள்ளன. இதைப் பற்றிய உங்களின் கருத்து?

நாம் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பல்கலை எந்தளவு அதிக விஷயங்களை வெளியிடுகிறது என்பதைவிட, அந்த விஷயங்கள் தரமானவையா என்பதுதான் முக்கியம். இன்றைய நிலையில், நாட்டின் பல பல்கலைகள், ஆராய்ச்சி பேப்பர்கள் என்ற பெயரில், அதிகளவில் விஷயங்களை வெளியிடுகின்றன.

ஆனால், அவை குறிப்பிட்ட தேவை சார்ந்ததாக(வெறும் தகுதிநிலை) மட்டுமே இருக்கிறதே ஒழிய, தரமான ஒன்றாக இருப்பதில்லை. எனவே, அவை, பெரும்பாலும் தரமற்றவை என்று இருந்தால், அதைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை, வெறும் தகுதிநிலை என்பது, படைப்பாக்கத் திறனுக்கு எதிரி. இந்த நாட்டில், பல பல்கலைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை, வெறும் தகுதிநிலைக் கொண்ட மாணவர்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனவே ஒழிய, அவர்களின் படைப்புத் திறனுக்கு அல்ல. இவைதான், இந்தியாவில், படைப்பாக்க ஆற்றலை காலி செய்யும் முக்கிய கேந்திரங்கள்.

அதேசமயம், இந்தியாவில் நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அவை ஆரம்ப நிலையில் இருக்கின்றன. சில கல்வி நிறுவனங்களில், இளம் மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு, வெற்றிபெற்று வருகிறார்கள். எங்கே, நபர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ, அங்கே குறிப்பிடத்தக்க சாதனையும், எங்கே சுதந்திரம் கிடைக்கவில்லையோ, அங்கே வெறுமையும் இருக்கின்றன.

மக்களுக்கு சொந்தமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், அவர்களுக்குள் தன்னம்பிக்கையை நம்மால் ஏற்படுத்த முடியாது. அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை, சுயமாக செயல்பட விடுங்கள். நாட்கள் செல்ல செல்ல, தவறுகளிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டு, மீண்டெழுவார்கள்.

ஒருவர் புதிய விஷயங்களை முயற்சிக்கும்போது, அவர்களுக்கு உதவி வழங்கப்பட்டால், பின்னர், தன்னால் எதையும் சுயமாக செய்ய முடியாது என்ற எண்ணத்திற்கு அவர் வந்துவிடுவார். எப்போதும் உதவியையே எதிர்பார்ப்பார். எனவே, பல்கலைகள், மாணவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவர்களை தங்களின் பணியில் முழு மனதுடன் ஈடுபட செய்ய வேண்டும். அந்த நேரத்தில் குறுக்கிட்டு, உதவிகளை செய்யக்கூடாது.

மாணவர்கள் ரிஸ்க் எடுக்கட்டும். அதனால் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். இதன்மூலமே, ஒரு பல்கலை வளர முடியும். நாட்டின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து இளம் மாணவர்கள் வருவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் நல்ல மூளை சக்தி உடையவர்களாகவும், கணிதம் மற்றும் அறிவியலில் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்கள் சாதிப்பதற்கு தகுந்த சூழல் வழங்கப்பட வேண்டும். அதுபோன்ற நபர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு சிலரை சரியாக பயன்படுத்தினாலே, நமது கல்வித் தரம் மேம்பட்டு, அதன்மூலம் நாட்டின் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

நன்றி: கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us