‘மாணவர்களின் தகுதியைப் பொறுத்தே வேலைவாய்ப்பு’ | Kalvimalar - News

‘மாணவர்களின் தகுதியைப் பொறுத்தே வேலைவாய்ப்பு’

எழுத்தின் அளவு :

இந்திரா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜேந்திரன் அளித்த பேட்டி:

பிளஸ் 2வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அதனை குறையாக நினைப்பது தவறு. அடிப்படைகளை உணர்ந்து உரிய முறையில் படித்து பெற்றொருக்கு சுமைகளை குறைக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும். மனப்பாடம் செய்து படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு கடினமாக இருக்கும். கல்வி முறை குறித்த தெளிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.

எந்த வருடத்தில் என்ன படிக்க வேண்டுமோ, அதனை குறிப்பிட்ட வருடத்தில் படிப்பது மட்டுமே சரியாக இருக்கும். பாடத்திட்டங்களை மீறிய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மாணவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். தேர்ச்சி விழுக்காட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறையினால் எந்த பயனும் இல்லை.

மாணவர்கள் புத்தகப் புழுவாக மட்டும் இருக்காமல், சமுதாய தேவைகளை நோக்கமாகக் கொண்டு செயல்படவேண்டும். கனிணி, அலைபேசி, இணையதளம், தொலைக்காட்சி போன்றவற்றில் தேவையில்லாமல் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களுடன் இணைந்து மாணவர்கள் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்.

இதனை நன்கு உணர்ந்து கொண்டதால்தான் மாணவர்களுக்காக ஆளுமைத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புப் பயிற்சிகள், மொழித் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் என ஒவ்வொரு ஆண்டுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களை கல்வி நிலையத்தோடு நிறுத்தி விடாமல், சமூக பங்களிப்போடு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழக அளவில் முதலிடத்தை பெற்றது செயல்பாட்டிற்கான சிறந்த சான்று.

இன்றைய சூழ்நிலையில், அதிக வேலைவாய்ப்புகள் இருந்தாலும், வேலைவாய்ப்பினை பெறுவது கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே வேலைவாய்ப்புக்கு ஏற்ற விதத்தில் மாணவர்களை தயார் செய்வது அவசியம். மாணவர்களின் தகுதியைப் பொறுத்துதான் வேலைவாய்ப்பினை பெறுவதும் அமைகிறது. அதே போன்று அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான திறமைகளைப் பெற்றிருப்பதில்லை.

திறமையான மாணவனுக்கு கிடைத்த மாதிரியான சம்பளம் நமக்கு கிடைக்கவில்லையே என்று மற்றவர்கள் நினைப்பது தவறு. நமது திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டுமே தவிற, ஒப்பிடுதல் கூடாது. கடமை உணர்வோடு படித்தால் வேலை கிடைப்பது உறுதி.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us