‘கல்வி வியாபரமல்ல; சேவை’ | Kalvimalar - News

‘கல்வி வியாபரமல்ல; சேவை’

எழுத்தின் அளவு :

கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் ஆனி ஜேக்கப் அளித்த பேட்டி:

மதிப்பெண்களை வைத்து மாணவரை எடைபோடுவது தவறு. பெரும்பான்மையானோர் மதிப்பெண்களை ஒரு கருவியாக பார்க்கின்றனர். மதிப்பெண் சார்ந்த கல்வி முறை மாற வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி காரணமாக பொறியியல் கல்லூரிகள் தேவையான அளவை விட மிகவும் அதிக அளவில் உருவாகின. ஊதியத்தை கணக்கிட்டு ஒருவரின் நிலையை பார்ப்பதனால் தகவல் தொழில்நுட்பம் போன்ற அதிக ஊதியத்தை தரும் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். அதை விட்டு நமக்கு எது வருமோ அதனை படித்தால் சாதிக்கலாம். தற்போது பொறியியல் படிக்கும் மாணவர்களில் 30லிருது 40 விழுக்காட்டு மாணவர்கள் விரும்பி படிப்பினை தேர்ந்தெடுத்தவர்கள் இல்லை. பொறியியலில் மட்டுமல்லாது அறிவியல், மானுடவியல் சார்ந்த படிப்புகளிலும் வளர்ச்சி சம பங்கில் இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் அவர்களே சம்பாதித்துப் படிக்கின்றனர். அதனால் அவர்களின் படிப்பினை அவர்களே தேர்ந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இங்கு பெற்றோரின் பொருளாதாரத்தைக் கொண்டுதான் மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. இதனால் பெற்றோர் தங்களின் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மேல் திணிக்கின்றனர்.

18-24 வயதுக்குள் உயர்கல்வி கற்பவர்களின் விழுக்காடு ஜப்பானில் 30ம், பிலிப்பைன்சில் 25ம், கொரியாவில் 18ம், இந்தியாவில் 12 ஆகவும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 22 விழுக்காடு உள்ளது. இது இந்திய சராசரியைவிட அதிகமாகும். இதில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவிலான ஆற்றல் இருந்தாலும், அதனை நெறிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் சூழ்நிலை ஆகியவை இணைந்துதான் சிறந்த மாணவனை உருவாக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில் நன்றாக படித்து வேலை இல்லாமல் இருக்கும் நிலையும் உள்ளது. சரியான பணியாளர்கள் கிடைக்கவில்லை என்று ஆள் தேடும் நிலையும் உள்ளது. வேலை வேண்டாம் என்று சுய தொழில் தொடங்கும் மாணவர்களின் உருவாக்கம் வேலைவாய்ப்பின்மையை போக்கும்.

மாணவர்களிடம் கணித அறிவும், பகுப்பாயும் தன்மையும் குறைவாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்திறனை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு தேவை புதிய கண்டுபிடிப்புகளே. அதனால்தான் கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதற்கான ஆய்வு மையம், மாணவர்களை சுய தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

பள்ளிக் கல்வி குறித்து ‘சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்ட அமைப்பு‘ (பி.ஐ.எஸ்.ஏ.) ஆய்வு செய்ததில் இந்தியா கடைசிக்கு முந்திய இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறுவதற்கு பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் புகுத்தப்பட வேண்டும். 1 முதல் 5 வகுப்பு வரை படிப்பின் மேல் ஆசையை உருவாக்கும் வகையிலும், 5 முதல் 8 வகுப்பு வரை பிரித்து அறியும் திறனை உருவாக்குவதிலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆர்வமிக்க படிப்பினை தேர்ந்துகொள்பவர்களாகவும் மாணவர்களை உருவாக்க வேண்டும்.

கல்வி மிக முக்கியமான தேவை. கல்வியின் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி சம பங்கில் இருக்க வேண்டும். கல்வி வியாபரமல்ல, சேவை என்பதை அனைத்து கல்லூரிகளும் உணர்ந்து செயல்படவேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us