‘வேலை கிடைப்பதில்லை என்பது மாயை’ | Kalvimalar - News

‘வேலை கிடைப்பதில்லை என்பது மாயை’

எழுத்தின் அளவு :

செண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் மீர் முஸ்தபா ஹூசைன் அளித்த பேட்டி:

தமிழ்நாடு முழுவதும் 570 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தரத்தை உயர்த்தி வருவதால், இந்தியாவிலேயே தரம்வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன.

ஒரு மாணவனுக்கு எதில் கவனம், ஆர்வம் குறைவாக இருக்கிறதோ அதனை முதல் ஆண்டிலேயே கண்டுகொண்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவரின் முன்னேற்றத்திற்கு துணைபுரிகிறோம். கல்லூரியின் வளர்ச்சிக்கு நிர்வாகத்தை விட ஆசிரியர்கள், முதல்வர் போன்றவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள்தான் தூண்களாக இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறார்கள்.

மாணவர்களுக்கு கல்வி மட்டும் அளிக்காமல் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் பணியினையும் அளித்து பொதுநலனில் ஆர்வம் கொண்டவர்களாக உருவாக்குகிறோம்.

இயற்கையான சூழல், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என மாணவன் கல்வி பயிலும் இடம் அமையும் போது, மாணவன் மன அழுத்தம் இன்றி கல்வி கற்பதற்கு உதவியாக இருக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம், கல்வித்திறன், உளவியல் ஆலோசனைகள், வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் போன்றவை வழங்குவதால், நல்ல வேலையையும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

அரசாங்கம் அதிக அளவில் உதவித்தொகைகளை வழங்கி வருவதால் பொறியியல் கற்கும் மாணவர்களுக்கு பொருளாதார நெருக்கடி குறைந்து வருகிறது. இது தவிர தனியார் அறக்கட்டளைகள் 90 வகையான உதவித்தொகைகளை வழங்குகின்றன. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

கல்விக்கடன்களை மாணவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே பெறுவதற்கு கடினப்படும் வேளையில், கல்லூரிக்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே மாணவர்களுக்கு கல்விக்கடன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுத்தருகிறோம்.

பொறியியல் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பது மாயை. படிக்கும்பொழுதே வருமானம் ஈட்டும் வகையில், கல்வி சார்ந்த தொழிற்பயிற்சியை வழங்கி வருவதால், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை எதிர்நோக்காமல் சுயமாக தொழில் தொடங்கும் ஆர்வத்தை மாணவர் பெறுகிறார்.

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு அரபி மொழி, ஜப்பானிய மொழி, சீன மோழி ஆகியவை கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர் வெளிநாட்டு வேலைக்கும் தன்னை படிக்கும்பொழுதே தயார் செய்கிறார்.

நகர்ப்புற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பொழுதுபோக்கிற்கு அதிகமான வாய்ப்புகள், வசதிகள் உள்ளன. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லாததால் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துகின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us