‘தெளிவாக திட்டமிடுங்கள்’ | Kalvimalar - News

‘தெளிவாக திட்டமிடுங்கள்’

எழுத்தின் அளவு :

ஜெ.என்.என். கல்விக் குழும தலைவர் ஜெயச்சந்திரன் அளித்த பேட்டி:

ஒழுக்கம், தரம், ஆரோக்கியமான சூழல் இருந்தால் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வத்துடன் தானாகவே வருவர். மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் சக நண்பராக பழகுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்திற்குரிய கல்வி நிறுவனமாக இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து ஒரு குடும்பமாக செயல்படுகிறோம். மாணவிகளின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிப்பதால் பல்வேறு மாநில மாணவிகள் ஆர்வத்துடன் வந்து கல்வி கற்கின்றனர்.

கல்வி நிறுவனம் சிறப்பாக செயல்படுவதால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் தர வரிசையில் சிறப்பான இடத்தை பெற முடிந்தது. அனுபவமிக்க பேராசிரியர்களை பணிக்கு அமர்த்தியிருப்பதால் கல்வி பயிலும் மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுகின்றனர். முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகைகள், சேவை நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசக் கல்வி போன்றவற்றை வழங்கி வருகிறோம்.

தற்போதைய மாணவர்களிடம் அக்கறை குறைவாக உள்ளது. அதே போன்று நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களிடையே தன்னம்பிக்கை குறைவாக உள்ளது. மாணவர்களை நேரடியாக சந்தித்து ‘தங்களாலும் சாதிக்க முடியும்‘ என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்து, சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறோம். நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன்? என்பதை ஓவ்வொரு மாணவரும் உணர வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்தவனாக, சமுதாயத்தில் நல்ல குடிமகனாக உருவாக வேண்டும்.

அதிக மதிப்பெண் உடைய மாணவர்களுக்கு கல்வி அளித்து சாதனையாளர்களாக உருவாக்குவதை விட, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்குவதுதான் கல்வி. கற்களை சிற்பமாக மாற்றும் சிற்பியாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

மாணவர்கள் நடைமுறை சார்ந்த அறிவையும் பெற வேண்டும் என்பதற்காக 15 தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கும்பொழுது ஆர்வத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். எதுவாகப் போகிறோம்; எப்படி செயல்பட வேண்டும் என்பதை முதலாண்டு துவக்கத்திலேயே திட்டமிட வேண்டும். பொருளாதாரத்தை சாராமல், மனம் சார்ந்து படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். தெளிவான பார்வையோடு, பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு தங்களையும் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.

‘நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?, நான் 10 பேருக்கு தொழில் வாய்ப்புகளை கொடுக்கும் சுய தொழில்புரிபவரோக மாற வேண்டும்‘ என ஓவ்வோரு மாணவரும் நினைக்க வேண்டும். மாணவர்கள் வேலைவாய்ப்பைத் தேடி ஒடுவதற்கு மாணவரின் பெற்றோரும், சமுதாயமும் முக்கிய காரணம். தங்கள் குழந்தைகள் அதிக வருமானத்தை பெறும் பணியாளாக இல்லாமல், வேலை கொடுப்பவராக வேண்டும் என பெற்றோரும், அந்த கனவை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

மாணவர்களும் சுகமாக ஒரு அறையில் உட்கார்ந்து செய்யும் வேலை நமக்கு போதுமானது என நினைக்கக்கூடாது. களத்தில் இறங்கி பணியாற்ற தயாராக வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us