இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் | Kalvimalar - News

இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள்

எழுத்தின் அளவு :

கல்லூரிகளில் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி பெரும் சிறந்த மாணவர்களில், 25-30 சதவிகிதத்தினர் மட்டுமே, தரமான இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், வேலை வாய்ப்பை பெறுகின்றனர். அவர்களிலும் ஒரு சிறு பகுதியினரே ஆற்றும் பணிகளிலும், பொறுப்புகளிலும் தம் திறமைகளைக்காட்டி மேலே மேலே முன்னேற முடிகிறது.

இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன? வாழ்க்கைப் பயணத்தில், தொடர்ந்து நீச்சலடித்து முன்னேற, இளைஞர்களுக்கு வெறும் படிப்பறிவு மட்டும் போதாது; இன்றியமையாத அடிப்படை வாழ்க்கைத் திறன்களும், மென் திறன்களும் வேண்டும் என்ற உண்மையைத்தான்!

உலக சுகாதார நிறுவனம் (WHO), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற, 10 அடிப்படை வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என, பரிந்துரை செய்திருக்கிறது.

அவை:

1. தன்னைத் தானே அறிதல்:
ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகள், தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2. தகவல் தொடர்பாற்றல்:
பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல், பிறர் புரிந்து கொள்ளும் விதமாக, தெளிவாக, உறுதியாக, பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் வேண்டும்.

3. பிறருடன் உறவு பேணும் திறன்:
ஆரோக்கியமான மனித உறவுகள் வாழ்வின் வெற்றிக்கான அடித்தளம். பிறருடன் கனிவு, மரியாதை, மனித நேயத்துடன் பழகி, நல்லுறவைப் பேணுதல் வேண்டும்.

4. உணர்ச்சிகளைக் கையாளும் திறன்:
தனது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், கையாளும் திறன். ஆங்கிலத்தில் ’எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்று கூறப்படுகிற உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு சார்ந்த திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

5. பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்:
பிறர் நிலையில் தன்னை இருத்திப் பார்த்து, பிறரது உண்மையான நிலையையும், தேவைகளையும் புரிந்துகொண்டு, பிறர் நலனில் கவனம் செலுத்தி செயலாற்றும் திறனைப் பெற வேண்டும்.

6. ஆழ்ந்து சிந்திக்கும் திறன்:
பார்த்து, கேட்டு, உரையாடி, அனுபவித்து, அலசி, சேகரித்த தகவல்களை, முறையாக கொள்கைப்படுத்த, நடைமுறைப்படுத்த, மதிப்பிட, வகை செய்யும் சிந்தனைத்திறனாம், ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வேண்டும்.

7. மாறுபட்டு சிந்திக்கும் திறன்:
ஒரே மாதிரியாகச் சிந்திக்காமல், (ஆங்கிலத்தில் ’கிரியேடிவ் திங்கிங்’) மாறுபட்ட அல்லது படைப்புச் சிந்தனையுடன், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேல் தீர்வுகளை தேடும் சிந்தனை வேண்டும். இது படைப்புத்திறன் சார்ந்த சிந்தனை.

8. முடிவெடுக்கும் திறன்:
முடிவெடுக்கும் நோக்கத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு, சாத்தியமான பல வழிகளைக் கண்டறிந்து, அவற்றில் சிறந்த வழியைத் தேர்ந்து, முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9. பிரச்சினையைத் தீர்க்கும் திறன்:
பிரச்சினையை தெளிவாக வரையறுத்து, தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து, சிறந்த வழியை ஆய்ந்து தேர்ந்து, அதன் மூலம், பிரச்சினையைத் தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

10. மன அழுத்த மேலாண்மை:
மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஒருவர் ஆளாகும்போது, அதற்கான அடிப்படைக் காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும், தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, மன அமைதியையும், மன ஆரோக்கியத்தையும் விரைந்து அடையும் திறன் வேண்டும்.

மேற்கூறிய இத்திறன்கள் திடீரென்று கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க முடியாதவை. இளம் வயது முதலே பார்த்து, கேட்டு, படித்து, அனுபவித்து, கடைப்பிடித்து, கற்று அறிய வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்.

இவற்றை மாணவர்கள், இளைஞர்கள், இளம் பணியாளர்கள், படிப்படியாகக் கற்றுக் கடைப்பிடிக்க, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனிக்கவனம் செலுத்தி, நல்ல மாறுதல்களை இளம் சமுதாயத்தினரிடையே உருவாக்க வேண்டும்!

’எல்லையில்லா மனித வளம் இந்நாட்டில்!
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’

-ஏ.வி.ராமநாதன்,  மனித வள ஆலோசகர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us