பொறியாளர் மசோதாவை நிறைவேற்றுவது எங்களின் முக்கிய நோக்கம்: இ.சி.ஐ. தலைவர் | Kalvimalar - News

பொறியாளர் மசோதாவை நிறைவேற்றுவது எங்களின் முக்கிய நோக்கம்: இ.சி.ஐ. தலைவர்

எழுத்தின் அளவு :

பொறியாளர் மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பொறியியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த சட்டத்தின் மூலம், கூட்டு பொறியியல் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று இந்திய பொறியியல் கவுன்சில் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவினுடைய பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து, இந்திய பொறியியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர்.உத்தேஷ் கோலி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கே: பொறியியல் பட்டதாரிகள், தொழில்துறையுடன் ஒத்திசைய, ECI(Engineering Council of India) எவ்வாறு உதவுகிறது?

ப: ECI என்பது பொறியியல் அமைப்புகளின் ஒரு கூட்டிணைப்பு. ECI -யுடன் இணைந்த அனைத்து உறுப்பினர்களும், இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, தொழில்துறையுடன் தொடர்புகொள்ள உதவி செய்கிறார்கள். மேலும், சில அமைப்புகள், பொறியியல் மாணவர்களையே தங்களின் உறுப்பினர்களாக கொண்டுள்ளதால், அந்த மாணவர்கள், பட்டம்பெற்று வெளியே வரும் முன்னதாகவே, தொழில்துறையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.

கே: தேர்வுகள் மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை சம்பந்தமாக கல்வி நிறுவனங்கள் மற்றும் நெறிப்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றுடன் ECI -ன் தொடர்பு என்ன?

ப: இது லாபி செய்யும் ஒரு அமைப்பு அல்ல. பொறியியல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாக இது விளங்கி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்துறைக்கு தேவையானதை செய்து வருகிறது. நாங்கள் கவனம் செலுத்தும் ஒரு மிக முக்கியமான விஷயம் பொறியாளர் மசோதா. நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் மற்றும் அதற்காக அரசுடன் பேசியும் வருகிறோம்.

இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டுவிட்டால், பொறியியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த சட்டத்தின் மூலம், கூட்டு பொறியியல் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கும் மற்றும் அதன்மூலம் இத்தொழில்துறையை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் பொறியாளர்களுக்கான ஒரு பொறுப்புத்தன்மையையும் கொண்டு வரலாம். ஒருமுறை பொறுப்புத்தன்மை வந்துவிட்டால், சமூகத்தில் பொறியாளர்களுக்கான மதிப்பு இன்னும் கூடும்.

கே: கல்வி நிறுவனங்களுடன் நீங்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகிறீர்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லவும்.

ப: தங்களின் படிப்பை முடித்த பொறியாளர்களைப் பார்க்கையில், அவர்களில் பலரும் வேலையின்றி இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. தற்போதைய சூழலில், நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதுதொடர்பாக, நாங்கள் பல செமினார்களை நடத்தி, தொழில்துறையினரிடமிருந்து பல பரிந்துரைகளைப் பெற்று, அவற்றை, அரசு மற்றும் AICTE உள்ளிட்டவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

பொறியியல் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில், தேவையான மாறுதல்களை செய்யும்படி, AICTE அமைப்பிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்த வேண்டுகோள்களில் மிக முக்கியமானது, மருத்துவப் படிப்பில் உள்ளதைப்போல், பொறியியல் மாணவரும், தனது படிப்பை முடித்தப்பிறகு, கட்டாய Internship செய்ய வேண்டும் என்பதுதான். எனவே, குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரையான இன்டர்ன்ஷிப் திட்டத்தை கொண்டுவரும் பொருட்டு, நாங்கள் AICTE -க்கு பரிந்துரை செய்துள்ளோம்.

கே: தரமற்ற பொறியியல் கல்வி நிறுவனங்களில் படிப்பதால்தான், ஏராளமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள் என்று உணர்கிறீர்களா?

ப: ஆம். இந்தப் பிரச்சினையின் பாதிப்பு மிக அதிகம். AICTE அமைப்பும், தற்போது இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், NBA, கல்வி நிறுவனங்களுக்கு, முறையான அங்கீகாரம் பெறுவதற்காக நெருக்கடி கொடுத்து வருகிறது. தற்போதைய நிலையில், 20% முதல் 25% வரையிலான படிப்புகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவையாக இருக்கின்றன.

பொறியியல் கல்வி நிறுவனங்கள் தாறுமாறாக அதிகரித்து வரும் சூழலில், இயற்கையாகவே, ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்படும். இத்தகைய சூழலில், ஆங்காங்கே காணப்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகளின் தரம் எப்படி இருக்கும்?

மேலும், பொறியியல் படிப்பில் அதிக அக்கறையுள்ள மாணவர்கள், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களை நாடிச் சென்று விடுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் மட்டுமே சாதாரண கல்வி நிறுவனங்களை நாடி வருகிறார்கள். அங்கீகாரம் என்பது மிகவும் முக்கியம். இந்த அங்கீகாரம் என்பது, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

கே: தொழில் நிறுவனங்களும், பொறியியல் கல்வி நிறுவனங்களும், ஒத்திசைவாக, எந்த சிக்கலுமின்றி இயங்க வேண்டுமெனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ப: பாடத்திட்ட வடிவமைப்பே மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். சிறப்பான பாடத்திட்டத்தின் மூலமாக மட்டுமே, ஒரு பொறியியல் மாணவர், தனது படிப்பை முடித்தப் பிறகு, தொழில்துறையுடன் சிறப்பான முறையில் ஒத்திசைந்து இயங்க முடியும்.

ஒரு கல்வி நிறுவனம், தன் அருகிலுள்ள தொழில் நிறுவனத்துடன் ஒத்திசைந்து இயங்கும்போது, அந்நிறுவனத்தில் பணியாற்றும் நிபுணர்கள், அக்கல்வி நிறுவனத்தில் guest faculties என்ற வகையில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்.
                                                                   
                                                        நன்றி - கேரியர்ஸ்360

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us