அறிவோம் டிசைனிங் | Kalvimalar - News

அறிவோம் டிசைனிங்அக்டோபர் 15,2021,14:45 IST

எழுத்தின் அளவு :

டிசைன் என்பதை நம்மில் பலரும் வெறுமனே அழகான பொருட்களை உருவாக்குவது என ஒற்றைப்படையாக புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், டிசைன் என்பது நாம் சிந்திக்கும் முறைக்கும், நம்முடைய அனுபவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையது!



முக்கியத்துவம்: 


இன்றைய காலத்தில் நுகர்வு கலாச்சாரம் வெகுவாக மாற்றமடைந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாமல் வெறுமனே பொருளை வாங்குவதைத்தாண்டி, பொருளின் வடிவமைப்பு முதல் பேக்கிங்கின் வடிவமைப்பு வரை மக்கள் கூர்மையாக கவனிக்கின்றனர். பொருட்களின் தரத்தை கடந்து, மக்கள் அதன் வடிவ நேர்த்தியையும் நுகருகின்றனர் என்பதை நிறுவனங்களும் நன்கு அறிந்துள்ளன. 



விளம்பரம், திரைத்துறை, ஆடை வடிவமைப்பு, போன், கார், பைக் மட்டுமில்லாமல் இன்னும் பல துறைகளிலும் டிசைனிங் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ’ஆர்டர்’ செய்யும் உணவை தாங்கி இருகும் ’டப்பா’வின் 'பேங்கேஜிங்’ முதல் அனைத்து பொருட்களிலும் டிசைன் துறையின் பங்கு உண்டு. இத்துறை இன்னும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பல நிறுவனங்கள் டிசைன் திங்கிங்’என்பதை தீர்வுக்கான ஒரு யுக்தியாகவே அணுகுவதும் குறிப்பிடத்தக்கது.



சந்தை மதிப்பு:


மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, இந்திய தொழிற்துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 134.44 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் 'மேக் இன் இந்தியா’ 'ஆத்ம நிர்பார்’ திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் உள்நாட்டு சுயசார்புக் கட்டமைப்பை வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறச்செய்யும். 



போர்ரெஸ்டர் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கையின்படி, 'டிசைன் தொழிற்த்துறையின் மதிப்பு 162$ பில்லியன்' என மதிப்பிடப்பட்டுள்ளது. 'அனைத்து துறைகளின் சார்பில் டிசைனிற்கு செலவிடப்படும் பணத்தின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



படிப்புகள்:


தொழில்துறை டிசைன், தகவல்துறை டிசைன், பேஷன் டிசைன், இன்டீரியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பைன் ஆர்ட்ஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.



பண்புகள் மற்றும் வாய்ப்புகள்:


டிசைன் என்பது வெளித்தோற்றத்தை மட்டும் அல்லாது மேம்படுத்துதலையும் உள்ளடக்கியுள்ளது. டிசைனர்கள் ஒரு துறையில் அனைத்து நிலைகளிலும் ஈடுபடுவர். உதாரணமாக,  இன்டஸ்ட்ரியல் டிசைனர் ஒரு பொருளின் தேவை உணர்ந்து உருவாக்குவதோடு நில்லாமல், அப்பொருளின் பயன்பாடுகளை அதிகரிக்கவும் அனைத்து உற்பத்தி நிலையிலும் ஈடுபடுவார். 



டிசைனிங் படித்தவர்களது, அணுகுமுறை பிற துறையினரை காட்டிலும் சற்று வித்தியாசப்படும். டிசைன் படிப்பை முடித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் செய்யவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.



-ஏ.ஆர். ராமநாதன், தலைவர், டாட் ஸ்கூல் ஆப் டிசைன், சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us