அறிவோம் ஸ்வயம் | Kalvimalar - News

அறிவோம் ஸ்வயம்ஜனவரி 04,2022,08:52 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் சிறந்த கற்பித்தல், கற்றல் வளங்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட அற்புதமான இணையவழி இலவச கல்வித் திட்டம் தான், ஸ்வயம்!




முக்கியத்துவம்: இத்திட்டத்தின் மூலம், 9 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் அனைத்து பாடத்திட்டங்களையும் ஆன்லைன் வாயிலாக, அனைவரும் இலவசமாக பெறலாம். இதுவரை 203 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2 கோடியே 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.




படிப்புகள்: கட்டடக்கலை, பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், கணிதம், சட்டம், மேலாண்மை மற்றும் வணிகம், பள்ளிக் கல்வி, ஆசிரியர் கல்வி ஆகிய துறைகளில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனிமேஷன், பயோடெக்னாலஜி, சென்சார், சைக்காலஜி, அகடமிக் ரைட்டிங், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் படிப்புகள், ஏர்கிராப்ட் டிசைன், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பேங்கிங் அண்டு பினான்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான படிப்புகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.




பிரிவுகள்:


வீடியோ விரிவுரை, பதிவிறக்கம் மற்றும் அச்சிடக்கூடிய பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாசிப்புப் பொருட்கள், சோதனைகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலம் சுய மதிப்பீட்டு சோதனைகள், தீர்வுக்கான கலந்துரையாடல் ஆகிய 4 பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆடியோ-வீடியோ, மல்டி மீடியா மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த கற்றல் செயல்பாடு உறுதிசெய்யப்படுகிறது. இதற்காக 9 தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.




அவை:


* சர்வதேச கல்வி: ஏ.ஐ.சி.டி.இ., -அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்


* பொறியியல் கல்வி: என்.பி.டி.இ.எல்., - நேஷனல் புரொகிராம் ஆன் டெக்னாலஜி என்ஹேன்சிடு லேர்னிங்


* தொழில்நுட்பம் அல்லாத முதுகலை கல்வி: யு.ஜி.சி., - பல்கலைக்கழக மானியக் குழு


* இளநிலை கல்வி: சி.இ.சி., - கன்சார்ட்டியம் பார் எஜுகேஷனல் கம்யூனிகேஷன்


* பள்ளி கல்வி: என்.சி.இ.ஆர்.டி., - நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்டு டிரைனிங்


* பள்ளி கல்வி: என்.ஐ.ஓ.எஸ்., - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் 


* பள்ளி செல்லா குழந்தைகளுகுக்கான திட்டம்: இக்னோ - இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம்


* மேலாண்மை படிப்புகள்: ஐ.ஐ.எம்.பி., - இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூர்


* ஆசிரியர் பயிற்சி திட்டம்: என்.ஐ.டி.டி.டி.ஆர்., - தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்




சான்றிதழ்: ஸ்வயம் மூலம் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் கற்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற போதிலும், சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்த வேண்டும். இறுதித் தேர்வுகளுக்கு பதிவு செய்து, குறிப்பிட்ட தேதிகளில் நியமிக்கப்பட்ட மையங்களில் நேரடியாக தேர்வு எழுதலாம்.




விபரங்களுக்கு: https://swayam.gov.in/


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us