சிறந்த ஆசிரியர்களால் சாத்தியம்! | Kalvimalar - News

சிறந்த ஆசிரியர்களால் சாத்தியம்!மார்ச் 08,2022,12:41 IST

எழுத்தின் அளவு :

வகுப்பறை கல்விக்கு இணையான மாற்று ஆன்லைன் வழிக் கல்வி இல்லை என்பதை சமீபத்திய அனுபவத்தின் வாயிலாக உணர முடிகிறது. ஆன்லைன் வழியாகவும் திறம்பட கற்றுக்கொடுக்கவும், கற்கவும் முடியும். ஆனால், அது சாதாரண ஆசிரியர்களால் சாத்தியமில்லை. சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே டிஜிட்டல் வாயிலாகவும் சிறந்த முறையில் கல்வி கற்பிக்க முடியும். 



அதேவேளை, பெரிய அளவிலான பொருள்செலவு, போக்குவரத்து கால விரையம் இன்றி உலகின் எந்த மூலையில் இருந்தும் கருத்தாளர்கள், நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றொரு பகுதியில் இருக்கும் மாணவர்களுடன் எளிதில் கலந்துரையாடும் வாய்ப்பை இன்றைய டிஜிட்டல் உலகம் சாத்தியமாக்கியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 




சுய கற்றல்



மாணவர்களிடம் சுய ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால் மட்டுமே சுயகற்றல் என்பது முழுமை அடையும். எந்த ஒரு தலைப்பிலும், பாடத்திலும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ஆன்லைனில் உள்ள நிலையில், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி போதித்தல் என்பது இன்றைய சூழலில் அவசியமாகிறது. டிஜிட்டல் வழிக் கல்வியில் மட்டுமின்றி, வகுப்பறை கல்வியிலும், மாணவர்களது ஆர்வமும், சுவாரஸ்யமும் குறையாமல் கல்வி போதிக்க சிறந்த ஆசிரியர்கள் அவசியமாகிறார்கள். 



மாணவர்கள் - ஆசிரியர்கள் இருவருக்குமான உறவு என்பது மிக அற்புதமானது. மாணவர்களை செதுக்குவதில் பெரும் பங்கு ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது. அனைத்து மாணவர்களிடமும் திறமை உண்டு. அவர்களது திறமையை கண்டறிந்து, ஊக்குவித்து, சாதனை படைக்கச் செய்ய சிறந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். கல்வி மற்றும் மாணவர்களது திறன் மேம்பாடு அனைத்திலும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. 



சுயதொழில்



சிறப்பான கல்வி கற்பித்தல், திறன் வளர்த்தல், புத்தாக்க சிந்தனை மேம்படுத்துதல், தொழில் நிறுவனங்களுடனான உறவை பெருக்குதல், சமூக சவால்கள்களை கண்டறிந்து தீர்வு காணுதல் ஆகியவற்றில் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். மேலும், சுயதொழில் துவங்குவதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.



பிரச்னைகளை கண்டால் மாணவர்கள் ஓடிப்போகக் கூடாது. சமூகத்தில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தான் மாணவரது எதிர்காலம் புதைந்து உள்ளது. பிரச்னைகளே தொழில் வாய்ப்புகளையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தருகின்றன. அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் மாணவர்களது கல்வி, திறன், புத்தாக்க சிந்தனை, சமூக பொறுப்புணர்வு ஆகியவை அடங்கியுள்ளன.



மாணவர்களே, தோல்வியைக் கண்டு துவண்டுவிடவும் கூடாது; அனைத்தும் கிடைக்கிறது என்று அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும்!



-நளின் விமல்குமார், தொழில்நுட்ப இயக்குநர், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us