ஒழுக்கமே பலம்! | Kalvimalar - News

ஒழுக்கமே பலம்!ஏப்ரல் 14,2022,19:35 IST

எழுத்தின் அளவு :

2020ம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி கற்கும் திறனும் ஆரம்பக்கட்டத்தில் பாதிக்கப்பட்டது. 



ஆன்லைன் கல்வி வேண்டாம்



அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, ஆன்லைன் வாயிலான கல்வி முக்கியத்துவம் பெற்ற நிலையில், குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி வழங்குவது மிக கடினமாக அமைந்தது. குறிப்பாக, பள்ளிக்கு செல்ல துவங்கிய குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை போதிப்பது மிகவும் சவாலாக அமைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆன்லைன் வழியிலான கல்வி பெரும்பாலான மாணவர்களை சீரழித்துவிட்டது என்றே கூற வேண்டும். 



ஏனெனில், அதற்கு முன்பு பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது முற்றுலும் தடைசெய்யப்பட்ட நிலையில், 'மொபைல் போன்’ வாயிலாகத்தான் கல்வி கற்க வேண்டும் என்ற நிலையில், அவற்றை முறையாக பயன்படுத்த மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை. 



'மொபைல் போன்’ பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுக்கும் விதமாகவே அமைகிறது என்பது எனது கருத்து. வீடியோ கேம் விளையாடுவது, சினிமா மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பது, அவசியமில்லாமல் தோழர்கள், தோழிகளுடன் பேசுவது என மாணவர்களது செயல்பாடுகள் மாற்றம் அடைய காரணமாக 'செல்போன்’அமைகிறது.



வெளிநாடுகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் நம் நாட்டில் வழங்கப்படுவது இல்லை என்றாலும், நம் நாட்டிற்கு என்று போற்றப்பட வேண்டிய பாரம்பரிய, கலாச்சார, பண்பாட்டு நடைமுறைகள் உள்ளன. அவற்றை கடைபிடிப்பதன் வாயிலாக மாணவர்கள் ஒழுக்கத்தை வளர்ப்பதே நமது பலம். கல்வியை பொருத்தவரை, உலக நாடுகளுக்கு போட்டியிடும் வகையிலேயே நமது கல்வித்தரம் உள்ளது. மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது கல்வி முறை எந்தவிதத்திலும் தாழ்ந்துவிடவில்லை. நம் இளைஞர்களே உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் வெற்றிகரமாக செயல்படுவதே இதற்கு சான்று. 



எழுத்துத் தேர்வே சிறந்தது



பொதுத்தேர்வு என்பது மிகவும் இன்றியமையாதது. தேர்வு எழுதாமலேயே பள்ளி மாணவர்களையும் சரி, கல்லூரி மாணவர்களையும் சரி தேர்ச்சி பெறச் செய்வது வரவேற்கத்தக்கது அல்ல. காகித வடிவிலான எழுத்துத்தேர்வு அடிப்படையில் மாணவர்களது கல்வித்திறனை பரிசோதிப்பதே சரியான தேர்வு முறை. 



அனைவரும் தேர்ச்சி என்பது மாணவர்களது திறனை தாழ்த்தும் நடவடிக்கையாக தான் நான் பார்க்கிறேன். தேர்வுகளை பழையபடி நடத்த அரசு எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. மாணவர்களும் தேர்வின் அவசியத்தை உணர்ந்து, நன்றாக படித்து, சிறப்பாக தேர்வு எழுத வேண்டும். 



-வாசுதேவன், தலைவர், பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us