சர்வதேச அங்கீகாரம் அவசியம்! | Kalvimalar - News

சர்வதேச அங்கீகாரம் அவசியம்!மே 12,2022,16:59 IST

எழுத்தின் அளவு :

நம் நாட்டின் கல்விநிலை சர்வதேச அளவில் சிறக்க, அனைத்து கல்வி நிறுவனங்களும் உயர்தரமான கல்வியை வழங்குவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு, அதற்கு தேவையான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். 



எந்த கல்வி நிறுவனத்தாலும், உடனடியாக தரத்தை மேம்படுத்திவிட இயலாது என்றபோதிலும், எந்த ஒரு செயல்பாட்டிலும், நடவடிக்கையிலும் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து தருணத்திலும் தரத்தை உறுதிப்படுத்தி வரும்பட்சத்தில் உயர்நிலையை அடைய முடியும். தரமான கல்வியை வழங்குவதில் உள்நாட்டு அமைப்புகளின் அங்கீகாரம் மட்டுமின்றி, அபெட், ஏ.ஏ.சி.எஸ்.பி., ஏ.எம்.பி.ஏ., போன்ற சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரமும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரம் பெறுவது சாதாரண விஷயம் அல்ல; அதற்கு குறைந்து 6 ஆண்டு காலம் ஆகும். 



எனினும், எந்த ஒரு கல்வி நிறுவனமும் அதன் தரத்தை பரிசோதிக்க சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் நிறுவனங்களை அழைத்து, தயங்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான், தங்களது தற்போதைய கல்வி நிலை குறித்தும், சர்வதேச நிலையை அடைவதற்கு மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் அறிந்து, அதற்கேட்ப செயல்பட இயலும். 



ஆராய்ச்சியில் ஈடுபடுதல்



அடுத்ததாக, சிறந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர்களை பெற்றிருக்கும்போது தான், தரமான கல்வியை உறுதிப்படுத்த முடியும். ஆனால், நமது பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. அதற்குரிய நேரமும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும். 



தரமான கல்வியை வழங்குவதில் மூன்றாவதாக, தொழில் நிறுவனங்களுக்கு தொடர்புடைய வகையில் பாடத்திட்டங்களை வகுப்பதும் மிக அவசியமான ஒன்று. சிறந்த பயன்களை தரும் வகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்ட படிப்புகள் வழங்கப்பட வேண்டும். 



தேர்வு செய்தல்



மாணவர்களை பொறுத்தவரை, தரமான கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். பெரும்பாலான இந்திய மாணவர்கள், பிறரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, வாய் வழி தகவல்களை வைத்து கல்வி நிறுவனங்களை தேர்வு செய்கின்றனர். குறைந்தது 3 ஆண்டுகள் கொண்ட ஒரு படிப்பை மேற்கொள்ளும்போது, கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று, அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை கண்டும், பேராசிரியர்களிடம் கலந்துரையாடியும், அங்கீகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தும், ஆராய்ந்து அறிந்து ஒரு கல்வி நிறுவனத்தை சுயமாக தேர்வு செய்ய வேண்டும்.



-டாக்டர் ரமேஷ் பாட், துணைவேந்தர், என்.எம்.ஐ.எம்.எஸ்., பல்கலைக்கழகம், மும்பை




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us