முழுமையான கல்வி தேவை! | Kalvimalar - News

முழுமையான கல்வி தேவை! மே 31,2022,11:25 IST

எழுத்தின் அளவு :

நாம் பெரும்பாலும் சர்வதேச அளவில் போட்டியிடுவதையே விரும்புகிறோம். அவ்வகையில், சர்வதேச கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலுடன் ஒப்பிட்டோமேயானால், இந்திய கல்வி நிறிவனங்கள் குறிப்பிட்ட இடங்களை பெறுவதில்லை தான்...



வேறுபாடு



இத்தருணத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், சர்வதேச தரவரிசைகளுக்கான கணக்கீட்டு அளவீடுகள் வேறு, இந்தியா கல்வி நிறுவனங்களின் நோக்கம் வேறு. சர்வதேச கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், நமது இந்திய கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக, சுதந்திரத்திற்கு பிறகே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, படிப்படியாக முன்னேற்றம் அடைந்துவருகிறோம். 



கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் வெளியிடும் ஆராய்ச்சி கட்டுரைகளின் தரமாக உள்ளதற்கு, அவற்றின் பழமையும், அனுபவமும் ஒரு முக்கிய காரணம். மேலும், மேற்கத்திய நாடுகளின் கல்வி நிறுவனங்களை மனதில் வைத்தே அத்தகைய தரவரிசைக்கான அளவீடுகளும் வகுக்கப்படுவதால், சர்வதேச தரவரிசைக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. 



சுய ஆய்வு



எனினும், நமது கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆராய்ச்சிகளுக்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்? தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலான ஆராய்ச்சிகளை எந்த அளவிற்கு மேற்கொள்கிறோம்? ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் பேராசிரியர்களுக்கு எந்த அளவுக்கு நாம் நேரம் வழங்குகிறோம்?  ஆகிய கேள்விகள் மிக மிக முக்கியமானவை. இவற்றை மேம்படுத்தும்பட்சத்தில் தான், சிறந்த ஆராய்ச்சிகளை இந்திய கல்வி நிறுவனங்களால் மேற்கொள்ள முடியும்.



சர்வதேச அங்கீகாரங்களின் அவசியத்தை உணர்ந்தே, மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்களும் சுயபரிசோதனை செய்துகொண்டு ஒட்டுமொத்த தரம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான உடன்படிக்கை ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்தும்பட்சத்தில், நமது கல்வி நிறுவனங்களாலும் சர்வதேச அளவில் நிச்சயம் சிறந்த இடத்தை பெற முடியும்.



மனிதப் பண்புகள்



மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி மட்டும்மின்றி, கல்வி நிறுவனங்கள் மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களை பழக்கப்படுத்த வேண்டும். மனிதப் பண்புகள் குறித்து வகுப்புகளில் பாடம் நடத்தமுடியாது. ஆனால், அவற்றை மாணவர்களால் உணரச் செய்யும் வகையிலான சூழ்நிலைகளை ஏற்படுத்தித்தர முடியும். மனிதப் பண்புகள், திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முழுமையான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.



-டாக்டர் பி. சுக்லா, துணைவேந்தர், அமிட்டி பல்கலைக்கழகம், உ.பி.,




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us