சட்டத்துறையில் பெருகும் வாய்ப்புகள்! | Kalvimalar - News

சட்டத்துறையில் பெருகும் வாய்ப்புகள்!ஜூலை 09,2022,17:24 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவில் அதிகமான வருமானத்தை வழங்கும் துறைகளில் ஒன்று சட்டம். திறமையான, துறை சார்ந்த அறிவை தொடர்ந்து மேம்படுத்தும் சட்ட நிபுணர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குறிப்பாக, மேலை நாடுகளில் திறமையான சட்ட நிபுணர்கள் மற்ற எந்த துறையையும் விடவும் அதிக வருமானம் பெறுகின்றனர். 




படிப்புகள்



12ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை படித்த, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் சட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். பொதுவாக, பி.ஏ.எல்.எல்.பி., பி.பி.ஏ.எல்.எல்.பி., பி.காம்.எல்.எல்.பி., என சில பிரிவுகளில் 5 ஆண்டுகள் கொண்ட இளநிலை சட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன என்றபோதுலும், இந்த படிப்புகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. 



மாணவர்களின் வசதிக்காகவே இத்தகைய பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பி.ஏ.எல்.எல்.பி., மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி., படிப்புகளில் கலை, அறிவியல், கணிதம் என எந்த பிரிவை சேர்ந்த மாணவர்களும் அவரவர் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம். 



பெரும்பாலும், ’காமன் லா அட்மிஷன் டெஸ்ட்- கிளாட்’ எனும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பல்கலைக்கழகங்களும் பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே அம்மாநில அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் வழங்கப்படுகின்றன.



வாய்ப்புகள்



சட்டம் பயின்றவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சமீபகாலமாக புதுப்புது பணிகளும் உருவாகி வருகின்றன. சட்டம் படித்த மாணவர்கள் சிவில், கிரிமினல் என விருப்பமான பிரிவில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொள்ளலாம். 



போட்டித்தேர்வுகளின் வாயிலாக, ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் பதவியை பெறலாம். அரசு போலீஸ் துறையில் பப்ளிக் பிராசிக்குயூட்டர் - பி.பி., ஆகவும், சிவில் பிரிவில் கவர்மெண்ட் பிளீடர்- ஜி.பி., ஆகவும், மத்திய அரசின் சி.பி.ஐ., அல்லது மாநில அரசின் சி.ஐ.டி., பிரிவுகளில் சிறப்பு பி.பி., ஆகவும் பணியாற்றலாம்.



யு.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் அரசு பணிகளையும் பெறலாம். தனியார் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றலாம். எல்.எல்.எம்., எனும் சட்ட முதுநிலை பட்டப்படிப்பையும் தேர்வு செய்யலாம். அதன்பிறகான, பிஎச்.டி., முடிப்பதன் மூலம் சட்ட ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்ற முடியும்.



படிக்கும்போதே...



சிறப்பான எதிர்காலத்தை பெற, கிரிமினல் லா, லேபர் லா, பேமிலி லா, இண்டர்நேஷனல் லா, கான்ஸ்டிடியூசனல் லா என எந்த ஒரு பிரிவையும் ஆர்வமாகவும், ஆழமாகவும் படிக்க வேண்டும். துறை சார்ந்த அறிவும், சிறப்பான பேச்சாற்றலும் மிக அவசியம். புதிய மாற்றங்கள், சட்ட திருத்தங்கள், தீர்ப்புகள் என அனைத்திலும் அறிவை தொடர்ந்து வளர்த்திக்கொள்ள வேண்டும். 



படிக்கும் காலத்தில் ’மூட் கோர்ட்’, ஆண்டுக்கு ஒரு மாதம் 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை முறையாக மேற்கொள்ள வேண்டும். ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றுக்கொள்வதன் வாயிலாக அடிப்படையில் இருந்து, சட்ட நுணுக்கங்களை நன்றாக கற்றுக்கொள்ள முடியும். 



சைபர் கிரைம் மற்றும் பாரின்சிக் லா, ஹூமன் ரைட்ஸ் லா ஆர்பிட்ரேஷன், கார்ப்ரேட் லா, என்விரான்மெண்டல் லா என பல்வேறு மதிப்புக்கூட்டு படிப்புகளும் ஏராளமான கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவுகளில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளை பிற துறை சார்ந்தவர்களும் படிக்கலாம்.



- டாக்டர். முகம்மது ஷமியுல்லா, டீன், ஸ்கூல் ஆப் லா, பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us