வகுப்பறை கல்விக்கு நிகரில்லை! | Kalvimalar - News

வகுப்பறை கல்விக்கு நிகரில்லை!அக்டோபர் 01,2022,23:55 IST

எழுத்தின் அளவு :

கொரோனா பெருந்தொற்று தீவிரம் அடைந்த காலத்தில், ஓர் ஆண்டிற்கும் மேலாக கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. தற்போது, கொரோனா தீவிரத்தில் இருந்து மீண்டு பள்ளி, கல்லூரி அனைத்தும் மீண்டும் இயல்பாக இயங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.



அத்தகைய கடினமான கால கட்டத்தில், ஆன்லைன் வழி கல்வி மாணவர்களுக்கு உதவியதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நேரடி வகுப்புறை வழி கல்விக்கு என்றுமே ஆன்லைன் வழி கல்வி மாற்றாக அமையாது; இரண்டையும் சமநிலையில் வைத்து பார்ப்பதே சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது கருத்து. ஏனெனில், நான்கு சுவற்றிற்குள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் திரை வாயிலாக கல்வி கற்பது என்பது கடினமானதாக மாணவர்களே கருதுகின்றனர். சக மாணவ நண்பர்களுடன் பேசி, பழகி, ஆசிரியர்களுடன் கலந்துரையாடி கல்வி கற்பதையே அவர்கள் விரும்புகின்றனர். 



வகுப்பறை வழி கல்வியே ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தருணங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக, மாணவர்களால் ஓடி, ஆடி விளையாட முடிகிறது. வகுப்பறை வழி கல்வியின் முக்கியத்துவத்தையும், நன்மையையும் அறிந்துகொள்ள 'கொரோனா’ ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.



புதிய கல்வி கொள்கை



புதிய தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒட்டு மொத்த கல்வித்திறன் மேம்படும்; பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் அதிகளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்; உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட மாணவர்கள் சிறந்த கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மேம்படுத்தும். இவ்வாறு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய தேசிய கல்வி கொள்கை வரவேற்கத்தக்க ஒன்று. 



வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் தரத்திற்கு நம் நாட்டு கல்வி நிறுவனங்களும் வளர்ச்சி அடைந்து சர்வதேச அரங்கில் இந்திய கல்வி நிறுவனங்களும் முக்கிய இடம் பெற புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும்.



ஸ்டார்ட்-அப்



தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய விருப்பம் இல்லாத இளைஞர்கள் புதியதாக தொழில் துவங்க முயற்சிக்கின்றனர். தொழில்முனைவோருக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வதுடன், ஒரு சிறந்த ‘ஐடியா’வை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள தொழில் திட்டத்தை பின்பற்றுவதை விட புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.



- ஐசரி கே. கணேஷ், நிறுவனர் மற்றும் வேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us