மாரியம்மாள் (பிளஸ் 2 தேர்வு - விலங்கியலில் இரண்டாமிடம்) 2013 | Kalvimalar - News

மாரியம்மாள் (பிளஸ் 2 தேர்வு - விலங்கியலில் இரண்டாமிடம்) 2013

எழுத்தின் அளவு :

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த கட்டட கூலித்தொழிலாளியின் மகள் விலங்கியல் பாடத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்தார். உடல்நிலை சரியில்லாமல் மூன்று மாதங்கள் பள்ளி செல்லாமல் இருந்தவர் ஆசிரியர்களின் உதவியுடன் சாதித்துள்ளார்.

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் படித்து வந்த மாணவி மாரியம்மாள் தமிழ் 184, ஆங்கிலம் 149, இயற்பியல் 124, வேதியியல் 123, தாவரவியல் 186, விலங்கியல் 198 என மொத்தம் 964 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் இவர் விலங்கியலில் எடுத்துள்ள 198 மதிப்பெண்கள் மாநில அளவில் இரண்டாமிடமாகும். கழுகுமலை முதலியார் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் பழனியம்மாள் ஆகியோரது மகள் தான் மாரியம்மாள். இவரது பெற்றோர் இருவரும் கட்டட கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

மேலும் ஆறாவது வகுப்பு படித்து முடித்துள்ள மாரிக்கண்ணன் என்ற தம்பியும் உள்ளார். கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாரியம்மாள் விலங்கியல் பாடப்பிரிவில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து மாரியம்மாள் கூறியதாவது, "எனது பெற்றோர் கட்டட வேலைக்கு சென்றாலும் என்னை வீட்டு வேலை கூட பார்க்க விடாமல் படிக்க சொன்னார்கள். நானும் டியூசன், சிறப்பு பயிற்சி என்று செல்லாமல் எப்போதும் போல் வீட்டிலேயே அக்கறையுடன் படித்தேன். அதேபோல் தேர்வு நேரங்களில் மட்டும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன்.

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் அனைத்து பாடத்தையும் கவனமாக படித்தாலும் தாவரவியலில் கட்டாயம் சாதிப்பேன் என்று நம்பினேன். ஆனால் நான் எதிர்பார்க்காத விலங்கியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெறுவேன் என்று நினைக்கவில்லை.

எனது படிப்பிற்கு எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் பேனிஸ், தமிழரசி, ஹெலன், சீதா மகேஸ்வரி, ராஜாராம் ஆகியோர் மிகவும் உதவியாக இருந்தனர்.

எங்களுக்கு வசதியில்லை என்பதால், நான் பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பதால் தேர்வுக்கு நன்றாக தயாராக வேண்டுமென எங்கள் அம்மாவுடன் வேலை செய்யும் கொத்தனார் எங்கள் வீட்டிற்கு இன்வெட்டர் மாட்டிக் கொடுத்தார். வீட்டில் டிவியும் இல்லையென்பதால் படிப்பிற்கு இடையூறு என்பது இல்லை.

சிறுவயது முதல் டாக்டருக்கு படிக்க வேண்டும், பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் எங்கள் வீட்டு வசதியை பார்த்தால் அதுமுடியுமா என்று தோன்றினாலும், எனது படிப்பிற்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்று மாரியம்மாள் கூறினார்.

அவரது பெற்றோர் கூறியதாவது, எப்போதுமே வீட்டில் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பாள். இப்போது விலங்கியலில் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று இருப்பதால் எங்களது கஷ்டத்தை பார்ப்பதா அல்லது மகளின் ஆசையை நிறைவேற்றுவதா என்ற எண்ணத்தில் இருக்கிறோம் என்று மாரியம்மாளின் பெற்றோர் கூறினர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us