தனியார் பள்ளிகளின் அபரிமிதமான வளர்ச்சி: யுனெஸ்கோ | Kalvimalar - News

தனியார் பள்ளிகளின் அபரிமிதமான வளர்ச்சி: யுனெஸ்கோ நவம்பர் 14,2022,11:32 IST

எழுத்தின் அளவு :

அறிக்கைகடந்த 2014 முதல் இந்தியாவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 97 ஆயிரம் பள்ளிகளில் 67 ஆயிரம் பள்ளிகள் தனியாரால் நிறுவப்பட்டுள்ளன. சிறந்த கல்வி சூழலிற்காக 73 சதவீத பெற்றோர் தனியார் கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்று யுனெஸ்கோ சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் ஜி.இ.எம்.,- 2022 எனும் சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சாராம்சங்கள்:


தெற்கு ஆசிய நாடுகளில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு கல்வியை வழங்குவதற்கான பெரும்பாலான செலவினங்களை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்கின்றன. அதேபோல, குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர்.

இச்சூழலில், அனைவருக்கும் தரமான கல்வியை  வழங்க வேண்டிய பொறுப்பு அரசாக்கங்களுக்கு உள்ளது. அனைவருக்கும் நல்ல தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கல்வி வாய்ப்புகளிலும் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.

அதிகரிக்கும் தனியார் பள்ளிகள்
 
தெற்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவிலும், தனியார் கல்வி நிறுவனங்கள் வலுவான இடத்தை பிடித்துள்ளன. 2019-20ம் ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு இணையாக தனியார் மற்றும் நிதி உதவி பெறாத பள்ளிகளிலும் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இது, தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி உதவி பெறாத நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களால் விரும்பப்படும் சர்வதேச பள்ளிகளும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இலங்கையில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் பொது பள்ளிகளாக இருந்தாலும், சர்வதேச பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2012 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. இந்தியாவில், 2014 முதல் நிறுவப்பட்ட 97,000 பள்ளிகளில் 67,000 தனியார் மற்றும் நிதி உதவி பெறாத பள்ளிகள் ஆகும். இந்தியாவின் 5 மாநிலங்களில் 1,000க்கும் மேற்பட்ட ’பட்ஜெட்’ தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூன்றில் இரண்டு பங்கு பள்ளிகள் தனி நபர்களால் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில், 80 சதவீத பள்ளி உரிமையாளர்கள் ஒரு பள்ளியை மட்டுமே வைத்துள்ளனர்.

கொரானா பாதிப்பு

ஒருபுறம் தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைந்து உள்ள சூழலில், மறுபுறம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும், குடும்ப வருமானம் குறைந்ததாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்துக்கொண்டிருந்த பல மாணவர்கள் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 2018ல் 33 சதவீதத்தில் இருந்த தனியார் பள்ளிகளின் சேர்க்கை விகிதம் 2021ம் ஆண்டில் 24 சதவீதம் ஆக குறைந்துள்ளது. குறிப்பாக ஆந்திரா, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர்.

பெற்றோரின் முக்கியத்துவம்

குறைந்த கட்டணம், வீட்டிற்கும் கல்வி நிறுவனத்திற்கும் இடையேயான தொலைவு மற்றும் தரம் ஆகியவையும் ஒரு பள்ளியை தேர்வு செய்வதற்கான பெற்றோரின் முடிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பலதரப்பட்ட மொழி பின்புலங்களைக் கொண்ட மக்களுக்கான இணைப்பு மொழியாக மட்டுமின்றி, சமூக அந்தஸ்தும் ஆங்கில வழி கல்வியை தேர்வு செய்ய ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பெரும்பாலான பெற்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை நாடுவதற்கான பின்புலத்தில், ஒரு நீண்ட காலனித்துவ வரலாறு மற்றும் உலகமயமாக்கலும் ஒரு பிரதான காரணம் ஆகும்.

சிறந்த கல்வி சூழலிற்காக இந்தியாவில் 73 சதவீத பெற்றோர்கள் தனியார் கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆங்கில வழி கல்விக்காக 12 சதவீதம் பெற்றோரும், அருகாமையில் அரசு பள்ளிகள் இல்லாத காரணத்தால் 10 சதவீதம் பெற்றோரும் தனியார் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் எட்டு நகரங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட 86 சதவீத குடும்பங்கள், மழலையர் கல்விக்காக மலிவான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு யுனெஸ்கோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



-சதீஷ்குமார் வெங்கடாசலம்


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us