வெளிநாட்டு உதவித்தொகை பெற தயாரா... | Kalvimalar - News

வெளிநாட்டு உதவித்தொகை பெற தயாரா...ஜனவரி 06,2023,13:14 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் உதவித்தொகையை பரவலாக அனைத்து முன்னணி நாடுகளும் வழங்குகின்றன. குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய தனித்துவமான உதவித்தொகைகளை வழங்குகின்றன. 



வெளிநாடுகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, பொதுவாக தகுதி அடிப்படையிலானவை அல்லது தகுதி மற்றும் தேவை அடிப்படையிலானவையாக இருக்கும். இது பாலினம், இனம், நாடு, படிப்பு, கல்வித் திறன், துறை போன்ற பல தகுதி அளவுகோல்களைக் கொண்டிருக்கலாம். ஒரு சர்வதேச உதவித்தொகை பெற தேவையான முக்கிய தகுதிகளை இங்கே பார்க்கலாம்...



பொதுவாக, அனைத்து உதவித்தொகைகளும் சில நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை நிச்சயம் கொண்டிருக்கும். அதற்கு ஏற்ப சில தகுதிகளையும் அவை எதிர்பார்க்கின்றன. ஆகவே, உரிய தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய எதிர்பார்க்கப்படும் தகுதிகளை கொண்டிருக்கிறோமா என்பதையும் சுய பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம். நீங்கள் எந்த நாட்டிற்கு, என்ன படிப்பிற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அதற்கு எந்த வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன, என்ன தகுதிகளை அளவுகோளாகக் கொண்டிருக்கின்றன என்பனவற்றை ஆராய்வது நல்லது.



அடிப்படை தகுதிகள்:




வெளிநாட்டில் படிப்பதற்கு உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய தகுதி. உதவித்தொகை வழங்கப்படுவதில் ஜி.ஆர்.இ., சேட், ஜிமேட் போன்ற நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 



அடுத்ததாக, ஆங்கில மொழித்திறன். ஜெர்மன், ஜாப்பனீஸ், கொரியன் என குறிப்பிட்ட மொழி அறிவும் சில உதவித்தொகைக்கு எதிர்பார்க்கப்படலாம். எனினும், பெரும்பாலும் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால், ஐ.இ.எல்.டி.எஸ்., மற்றும் டோபல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சர்வதேச மொழிப்புலமை தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருப்பதும் கட்டாயம் எதிர்பார்க்கப்படும் அடிப்படை தகுதி. கல்வி நிறுவனத்தைப் பொறுத்து எதிர்பார்க்கப்படும் மதிப்பெண் அளவு மாறுபடுகிறது என்றபோதிலும், சிறந்த கல்வி நிறுவனங்கள் சிறந்த மதிப்பெண்களையே அளவுகோலாக நிர்ணயிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 



திட்டமும், பயிற்சியும்...



உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது நிச்சயமாக கடைசி நிமிட முடிவாக இருக்க முடியாது. இது ஒரு நீண்டகால திட்டமாக இருந்தால், சில ஆண்டுகளுக்கு முன்பே அதை நோக்கி செயல்படத் தொடங்க வேண்டும். தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவராக நீங்கள் இருந்தால், செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் கல்வித் திறனை உயர்த்துவது. உங்கள் ஜி.பி.ஏ.,வை அதிகரிக்கவும், சில கூடுதல் படிப்புகளை படிக்கவும், நுழைவுத்தேர்வு மற்றும் ஆங்கில மொழிப்புலமை தேர்விற்காக உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவதும் அவசியம். உங்கள் தலைமைத்துவம், படைப்பாற்றல், சமூக உணர்திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்வதும் முக்கியம். 



இதற்கிடையில், ​​உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவைக் கண்காணித்து, விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை கடைசி நாளுக்கு முன்பே சமர்ப்பிப்பதை உறுதி செய்யவும்.



வாழ்த்துக்கள்!



-சதீஷ் குமார் வெங்கடாசலம்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us