கனடாவில் வாய்ப்புகள்! | Kalvimalar - News

கனடாவில் வாய்ப்புகள்!பிப்ரவரி 23,2023,16:13 IST

எழுத்தின் அளவு :

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மற்ற நாடுகளை விட கனடாவில் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. சிறந்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் கனடா பிரதான ஒன்றாக உள்ளது. 



கனடாவில் வழங்கப்படும் படிப்புகள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. அங்கு ஒரு படிப்பை நிறைவு செய்துவிட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என எந்த ஒரு நாட்டிற்கும் சென்று பணிபுரிய முடியும். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு வழங்கப்படுவதால் மாணவர்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்வதற்கு பலதரப்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 



தொழில்நுட்பம், ஸ்டெம் துறைகள், வேளாண்மை மற்றும் உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. மிகவும் பாதுகாப்பான நாடு. அரசாங்கத்தின் கண்காணிப்பிலேயே அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து உயர்கல்விக்காக வரும் மாணவர்களுக்கும் குடியுரிமை வழங்கும் நாடு கனடா தான். 



விசா கடினமா?


கனடா நாட்டு விசா கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று சொல்லப்படுவதும் உண்மைதான். நிறைய குடியுரிமை ஆலோசகர்கள் இணையதளங்களை மட்டுமே பார்த்து, குடியுரிமை வழங்குகின்றனர். விசா பெறுவதற்கோ, குடியுரிமைக்காகவோ அத்தகைய அனுபவமற்ற ஆலோசகர்களிடம் செல்லும்பட்சத்தில் தவறான வழிகாட்டுதல்களுக்கு ஆளாக நேரிடலாம். 



கனடாவைப் பொறுத்தவரை, குடியுரிமை ஆலோசனை வழங்குவதற்கு என்று பிரத்யேக படிப்பும், சான்றிதழும் அந்நாட்டு அரசால் வழங்கப்படுகின்றன. அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களிடம் கனடா குடியுரிமை குறித்த சரியான தகவல்களை பெறலாம். எந்த படிப்பிற்கு என்ன பல்கலைக்கழகம், எந்த நகரம் சிறந்தது போன்ற கேள்விகளுக்கு அனுபவமிக்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்கள் சரியாக ஆலோசனை வழங்குவர். 



மாறாக, மற்ற ஆலோசகர்கள் ஒருசில கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அட்மிஷன் பெற்றுத்தரும் தரகர்கள் போன்று செயல்படுவார்கள். அவர்கள் அவ்வாறான குறிப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடும். ஆகவே, பெற்றோரும், மாணவர்களும் இத்தகைய ஆலோசகர்களிடம் இருந்த கவனமாக இருக்க வேண்டும்.



மேலும், இந்தியா ஒரு வளரும் நாடு என்பதால் கனடா விசா வழங்கும் அதிகாரிகள் விசா பெற விரும்பும் இந்தியர்களின் உண்மையான காரணத்தை அறிந்தே அவர்கள் திருப்தி அடையும்பட்சத்திலேயே விசா வழங்குகின்றனர். உரிய பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், ஆங்கில மொழிப்புலமை சான்றான ஐ.இ.எல்.டி.எஸ்.,  உட்பட தேவையான ஆவணங்களும், எஸ்.ஓ.பி., என்று சொல்லக்கூடிய சரியான ‘ஸ்டேட்மெண்ட் ஆப் பர்ப்பஸ்’ ஆகியவை முறையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். 



மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற இந்தியாவில் நடத்தப்படும் ’நீட்’ போல கனடாவில் 'எம்கேட்’ எனும் தேர்வை எழுத வேண்டியது அவசியம். பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வி செயல்பாடுகளைப் பொறுத்து உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 




-கண்மணி தனசேகர், கனடா குடியேற்ற ஆலோசகர்.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us