செலவின்றி படிக்க 80 வகை நுழைவு தேர்வுகள் | Kalvimalar - News

செலவின்றி படிக்க 80 வகை நுழைவு தேர்வுகள்ஏப்ரல் 22,2023,14:18 IST

எழுத்தின் அளவு :

கல்வி என்பது செல்வம். அது எந்த வகையிலும் வரலாம். எனவே, செல்வத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது. கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு. எனவே, நாம் மேம்போக்காக கல்வியை தேடக்கூடாது; ஆழமாக படிக்க வேண்டும்.



தமிழர்கள் பண்டைய காலங்களிலேயே, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தில் மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர். கல்வி என்பது நம் மரபணுவிலேயே உள்ளது. எனவே, மாணவர்கள் தங்கள் திறமைகளை குறைத்து எடை போட வேண்டாம். நம் கவனத்தை, கல்வியின் பக்கமும், நாட்டின் முன்னேற்றத்திலும் திருப்ப வேண்டும். வேறு எங்கும் திசை மாறி விடக்கூடாது.



ஒவ்வொருவரும் தங்களின் வேலை, சம்பளம் மற்றும் வாழ்க்கைத்தர உயர்வு ஆகியவற்றுக்காகவே படிக்கிறோம். அதனால், எந்த வேலையில் அதிக சம்பளமும், வாழ்க்கை தரம் உயர்வும் உள்ளதோ, அதை நோக்கி பயணிக்க வேண்டும்.



பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ள பல படிப்புகளில், செலவின்றி படிக்கலாம். இதற்கு, 80 விதமான நுழைவு தேர்வுகள் உள்ளன. அவற்றில் ஓரளவு மதிப்பெண் எடுத்தால் போதும். படிப்பில் சேர முடியும்.



அந்த நுழைவு தேர்வுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,க்கான ஜே.இ.இ., மெயின்ஸ் தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் பெறுவது மிகவும் எளிது. அதற்கு முயற்சித்தால், தேசிய அளவிலான பல கல்லுாரிகளில், உயர்ந்த படிப்புகளில் சேரலாம். தற்போதைய நிலையில், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சி, மிக வேகமாக செல்கிறது.



அதற்கு ஏற்றாற்போல், நம் படிப்பை தேர்வு செய்வதுடன், கூடுதல் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். குறுகிய இலக்குகளில் நம்மை அடைத்து கொள்ள கூடாது. தொழில்நுட்பம், தொழிற்துறையின் வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு தேவையான படிப்புகள் மற்றும் அதிக சம்பளம் தரும் படிப்புகளை நோக்கி செல்லுங்கள். அதுவே சிறந்த உயர்கல்வியாக இருக்கும்.




- நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us