மாஸ்டர் ஆகுங்கள்! | Kalvimalar - News

மாஸ்டர் ஆகுங்கள்!ஏப்ரல் 25,2023,12:28 IST

எழுத்தின் அளவு :

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கும் உண்டு. ஆராய்ச்சியின் வாயிலாக நிகழ்த்தப்படும் கண்டுபிடிப்புகள், பிரச்னைகளுக்கு தீர்வாக மட்டுமின்றி சமுதாய மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது.




நிதி தேவை



அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நம் நாட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், வெளிநாடுகளைப் போன்று ஆராய்ச்சிக்காக தாராளமான நிதி உதவி இந்திய கல்வி நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக, தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆராய்ச்சிகளுக்கான செலவினங்களை சுய ஆதாரத்தின் வாயிலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. 



சி.எஸ்.ஆர்., எனும் கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூக பங்களிப்பிற்கான நிதி ஓரளவு பயன்படுகிறது என்றபோதிலும், அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.



நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்ட காலத்தில் தரமான உயர்கல்விக்காக வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு வந்தனர். தற்போது, இந்திய மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு மீண்டும் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும். அத்தகைய நிலையை அடைய இந்திய கல்வி நிறுவனங்கள் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், நல்ல பாடத்திட்டம், அனுபவமிக்க பேராசிரியர்கள், அதிக ஆராய்ச்சிகள் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். 



அதன்படி, எங்கள் கல்வி நிறுவனத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். குறிப்பாக, பல் மருத்துவத்தில் சிறந்த வசதிகளையும், பாடத்திட்டத்தையும் கொண்டுள்ளோம். பல ஆண்டுகள் அனுபவமிக்க பேராசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் கல்வி கற்போதோடு ஆராய்ச்சியையும் மேற்கொள்கின்றனர். சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளோம். முற்றிலும் காகிதம் இன்றி, டிஜிட்டல் வழி ஆவணங்களை பயன்படுத்துகிறோம். க்யூ.எஸ்., சர்வதேச தரவரிசையில் அதிக ஆராய்ச்சியைக் கொண்டு முன்னிலையில் உள்ளோம். தேசிய அளவிலான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையிலும் முன்னிலை வகிக்கிறோம்.



சரியான தேர்வு



மாணவர்கள் ஒரு முறை செயல்முறை பயிற்சி மேற்கொள்ளும் போது, அது பயிற்சியாக மட்டுமே இருக்கும். ஆனால், அதையே 100 முறை மேற்கொண்டால் 'மாஸ்டர்’ ஆகிவிடுவர். அவ்வாறு, தேவையான பயிற்சியை மேற்கொள்ள ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.



மாணவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை சரியாக இருக்கும். அனைவருக்கும் அனைத்து துறையும் சரியானதாக அமைந்துவிடாது. உதாரணமாக, சேவை மனப்பான்மை அதிகம் கொண்ட மாணவர்களுக்கு தான் மருத்துவம் சரியான தேர்வாக அமையும். ஆகவே, மாணவர்கள் ஒவ்வொருவரும் தனக்கான சரியான துறையை தேர்வு செய்து அதில் திறமையை வளர்த்துக்கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக அமையும். 



பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில், மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை மிகவும் வரவேற்கத்தக்கது.




-டாக்டர். என்.எம். வீரய்யன், வேந்தர், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்டு டெக்னிக்கல் சயின்சஸ், சென்னை


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us