கடினமாகும் ஆஸ்திரேலியா விசா | Kalvimalar - News

கடினமாகும் ஆஸ்திரேலியா விசாமே 19,2023,12:03 IST

எழுத்தின் அளவு :

உயர்கல்வி என்ற போர்வையில் வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்ட மோசடி விசா விண்ணப்பங்களின் அதிகரிப்பால், 5 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.



வழக்கமாக, ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்காக விசா வேண்டி பதிவிடப்படும் விண்ணப்பிங்கள் விரைந்து பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப்படுகிறது. ஆனால், வேலை வாய்ப்பிற்கான விசா விண்ணப்பிங்கள் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசீலிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பிற்கான விசா பெறுவது கடினம் என்பதால், சமீபகாலமாக பல வெளிநாட்டினர் உண்மையில் வேலைவாய்ப்பை பெறும் நோக்கில், உயர்கல்விக்கான விசா வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். 



அதிகபட்சமாக, 2019 ஆண்டில் 75 ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 



ஏராளமான நேர்மையான மாணவர்கள் உயர்கல்விக்காக மட்டுமே ஆஸ்திரேலிய விசா வேண்டி விண்ணப்பிக்கும் நிலையில், நேர்மையற்ற விசா விண்ணப்பங்களும் கணிசமாக அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற முறையின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் லாபகரமான சர்வதேச கல்வி சந்தையில் நீண்டகால தாக்கம் குறித்து சட்டத்துறையினர் மற்றும் கல்வித் துறையினரிடம் கவலைகளைத் தூண்டியுள்ளதாக, ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ எனும் ஆஸ்திரேலியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.



’தி ஏஜ்’ மற்றும் 'தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ நாளிதழ்கள் நடத்திய விசாரணையில், விக்டோரியா பல்கலைக்கழகம், எடித் கோவன் பல்கலைக்கழகம், வொல்லொங்காங் பல்கலைக்கழகம், டோரன்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முகவர்களிடமிருந்து, இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மீதான ஒடுக்குமுறையைக் காட்டும் மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன.



பெர்த்தின் எடித் கோவன் பல்கலைக்கழகம், கடந்த பிப்ரவரியில் இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முழுமையான தடை விதித்தது. மார்ச் மாதம், விக்டோரியா பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உட்பட எட்டு இந்திய மாநிலங்களில் இருந்து மாணவர் விண்ணப்பங்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்தது.



இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், லெபனான், மங்கோலியா, நைஜீரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிபந்தனைகளை வொல்லொங்கொங் பல்கலைக்கழகம் மார்ச் மாதம் வெளியிட்டது.



’பல்கலைக்கழகத்திற்கு வரும் விண்ணப்பிங்களின் ஒவ்வொரு பகுதியும் இப்போது கவனமாக ஆராயப்படுகிறது’, என்று அடிலெய்டின் டோரன்ஸ் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் இத்தகைய பல்கலைக்கழகங்களின் நடவடிக்கையால், ஆஸ்திரேலிய விரைவு விசா வேண்டு விண்ணப்பிக்கும் நேர்மையான மாணவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us