நேரம் நம் பரிசு | Kalvimalar - News

நேரம் நம் பரிசுஜூலை 26,2023,12:22 IST

எழுத்தின் அளவு :

கடந்த 30 ஆண்டுகளில் தொழில்துறை புரட்சியால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போதைய தொழில்நுட்ப புரட்சியால் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 



திறன்கள் முக்கியம்



மருத்துவம், வேளாண், பொறியியல், கலை என எந்த துறைகளில் பட்டம் பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே அவரவர் துறையில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை உருவாகிவருகிறது. மத்திய, மாநில அரசுகளும் திறன் வளர்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. திறன்களை மையப்படுத்தி பாடத்திட்டங்களை மேம்படுத்தும் செயல்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது. 



தற்போதைய சூழலில் ஒருவர் இருக்கும் இடம் வேறாகவும், அவர் வேலை செய்யும் இடம் வேறாகவும் உள்ளது. ஒரே நபர் பல்வேறு வேலைகளையும் எளிதாக செய்ய முடிகிறது. வேலைவாய்ப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்விமுறை, ஐந்தாண்டுகளில் முற்றிலும் மாறிவிடும். திறன்கள் அடிப்படையில் தான் வாய்ப்புகள் இனி நமக்கு கிடைக்கும். 



மகிழ்ச்சி - வளர்ச்சி


 


கல்வி என்பது கல்லுாரியுடன் முடிவது அல்ல. வாழ்கை முழுவதும் நாம் கற்ற கல்வியை செயல்படுத்தவேண்டும். மாற்றங்களுக்கு ஏற்ப திறன்களை, அப்டேட் செய்து கொள்பவர்கள் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும். எதிர்காலத்தில், வேலைவாய்ப்பு, சுயதொழில் எதுவாக இருந்தாலும், மகிழ்ச்சி– வளர்ச்சி இவ்விரண்டும் நம்மிடம் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். செய்யும் வேலையில் மகிழ்ச்சி இருந்தால் மட்டுமே வளர்ச்சி என்பதை காணமுடியும். தவிர, கல்லுாரி காலம் முதலே நம், நெட்வொர்க்கை விரிவாக்கி கொள்ளவேண்டும். பல்வேறு தொழில்நிறுவனங்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என நம்மை காட்டிலும் உயர்ந்தவர்களின் நட்பு நமக்கு சொத்து போன்றது.



சமூக சேவை



தற்போதைய சூழலில், மொபைல், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் மாணவர்கள் நேரத்தை விரையமாக்குகின்றனர். நேரம் என்பது நாம் ஒருவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொள்வது அவசியம். மாணவர்களை மொபைல் உலகில் இருந்து விலக்கி வைக்க, சமூக சேவையில் ஈடுபட செய்யவேண்டும். கல்லுாரி நிர்வாகங்கள் மாணவர்கள் அனைவரும் சமூக சேவையில் ஈடுபடுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கஷ்டப்படும் நபர்களை நேரடியாக பார்க்கும் பட்சத்தில், அவர்களின் குணநலன்களில் நல்ல மாற்றங்களை காணமுடியும். இதனை மையப்படுத்தியே எங்கள் கல்வி நிறுவனத்தில் சான்டா –365 என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். 



தவிர, தொழில்முனைவோர் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, காப்புரிமை அனைத்திற்கும் அதிக முக்கியத்தும் அளிக்கிறோம். ஒரு ஆண்டுக்கு 1000 காப்புரிமை பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு; அதை நோக்கி மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தி வருகிறோம்.



-எஸ்.நளின் விமல்குமார், தொழில்நுட்ப இயக்குனர், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us