அறிவோம் பாரஸ்ட்ரி | Kalvimalar - News

அறிவோம் பாரஸ்ட்ரிஆகஸ்ட் 14,2023,16:34 IST

எழுத்தின் அளவு :

வனஉயிரினங்களை பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல், வன மேலாண்மை, இயற்கை மற்றும் வளங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு அறிவியல் சார்ந்த படிப்பு 'வனவியல்’.



இளநிலை பட்டப்படிப்பு: பி.எஸ்சி., -பாரஸ்ட்ரி மற்றும் பி.எஸ்சி.,(ஹானர்ஸ்) - பாரஸ்ட்ரி



கால அளவு: 4 ஆண்டுகள்



தகுதிகள்: அறிவியலை பாடப்பிரிவில் குறைந்தது, 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பாடத்திட்டம்: வனத்துறையில் நிபுணத்துவம் பெறும் வகையில் பயிற்சி அளிப்பதே இப்பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வேளாண்மை, புவியியல், விலங்கியல், புள்ளிவிவரங்கள், நுண்ணுயிரியல், மானுடவியல், தோட்டக்கலை, ஜெனிடிக்ஸ், மரபியல், உயிரியல் அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி, உயிர் வேதியியல் மற்றும் தொழில்துறை நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை பாரஸ்ட்ரி படிப்பு உள்ளடக்கி உள்ளது.



கல்வி நிறுவனம்: கோவை அருகே வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரியில், வனவியல் குறித்த இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் படிப்பும் வழங்கப்படுகிறது. இவை தவிர, நாடு முழுவதிலும் பல்வேறு அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன.



வாய்ப்புகள் 


இன்று காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து வரும் நிலையில், இத்துறை சார்ந்த படிப்புகள் பிரபலமாகி உள்ளது. வனவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள், வனவிலங்கு மற்றும் வனத்துறை சார்ந்த அரசு பணிகளில் சேரலாம். 



தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு திட்டங்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், வனவியல் பட்டதாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றலாம். காடுகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு உதவலாம்.  



ஒரு வனவியல் நிபுணர், உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காடுகள், வன உயிரினங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட வளங்களை பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்கிறார். இதுபோன்ற பாதுகாப்பு நோக்கங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. 



இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் -ஐ.சி.எப்.ஆர்.இ., வன ஆராய்ச்சி நிறுவனம் - எப்.ஆர்.ஐ., சுற்றுச்சூழல் மறுவாழ்வு மற்றும் சமூக வனவியல் நிறுவனம் ஆகியவற்றிலும் வாய்புகளை பெறலாம்.



பணி நிலைகள்: வன பாதுகாவலர், உதவி வன பாதுகாவலர், டி.எப்.ஓ., ஐ.எப்.எஸ்., ஆர்.எப்.ஓ.,, பாரஸ்ட் மேனேஜர், பாரஸ்ட் சர்டிபிகேட் ஏஜெண்ட், வைல்டுலைப் பயாலஜிஸ்ட், நர்சரி மேலாளர் போன்ற பணி வாய்ப்புகளை பெறலாம். வனத்துறையில் அதிகாரியாக பணியாற்ற யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வேண்டும்.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us