சி.ஏ., படிப்பு கடினமல்ல | Kalvimalar - News

சி.ஏ., படிப்பு கடினமல்லஆகஸ்ட் 25,2023,02:16 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1949ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின் படி, நிறுவப்பட்ட 'இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா - ஐ.சி.ஏ.ஐ.,'  75ம்  ஆண்டை கொண்டாடுகிறது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதிலும் 5 மண்டல அலுவலங்களும், 168 கிளை அலுவலகங்களும் உள்ளன.



சி.ஏ., கடினமல்ல



பொதுவாகவே, சி.ஏ., படிப்பு மிகவும் கடினமானது என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஐ.சி.ஏ.ஐ., வழங்கும் புத்தகங்களை கொண்டு, தினமும் 4 மணிநேரம் முழுமையாக பயிற்சி பெற்று வந்தாலே போதும், சி.ஏ., தேர்வில் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு எழும் ஏராளமான சந்தேகங்களுக்கு உரிய தீர்வு காணப்படாமல் இருப்பதே இத்தேர்வு கடினமாக தோன்றுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. 



தொழில்நுட்பத்தின் வரவால், ஐ.சி.ஏ.ஐ., ஆன்லைன் வாயிலாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலான பயிற்சிக்காக டெல்லியில் 'டிஜிட்டல் லேர்னிங் ஹப்' எனும் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக மட்டுமின்றி, நேரடியாகவும் சி.ஏ., தேர்விற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.



10ம் வகுப்பு நிறைவு செய்து, 11ம் வகுப்பில் சேர்க்கை பெறும்போதே, சி.ஏ., படிப்பிற்கான பவுண்டேஷன் பயிற்சியில் சேரலாம். எனினும், 12ம் வகுப்பு நிறைவு செய்த பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பவுண்டேஷன் பயிற்சிக்கு ஐ.சி.ஏ.ஐ.,யின் மண்டல அலுவலகமான 'சதர்ன் இந்தியா ரீஜினல் கவுன்சில் - எஸ்.ஐ.ஆர்.சி.,' இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கிறது. 



12ம் வகுப்புடன் பவுண்டேஷன் நிலையை நிறைவு செய்த மாணவர்கள், பி.காம்., உட்பட எந்த ஒரு இளநிலை பட்டப்படிப்பையும் படிக்காமலயே நேரடியாக சி.ஏ., படிப்பில் சேர்க்கை பெறலாம். சி.ஏ., படிப்பிற்கான செலவும் மிகவும் குறைவு. தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து முறையாக தொடர்ந்து முயற்சித்தால் சி.ஏ., தேர்வில் தேர்ச்சி பெறலாம். உரிய பயிற்சி மேற்கொண்டால் 12ம் வகுப்பிற்கு பிறகு 4 முதல் 5 ஆண்டுகளில் சி.ஏ., தேர்ச்சி பெற முடியும். சமீபகாலமாக தேர்ச்சி விகிதமும் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.ஐ.ஆர்.சி.,யில், சி.ஏ., தேர்விற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.



சர்வதேச வாய்ப்புகள்



சி.ஏ., படித்தவர்களுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சி.ஏ., படித்தவர்கள் கூடுதலாக இரண்டு தாள்களில் தேர்வு எழுதுவதன் வாயிலாக உலக நாடுகளில் பயிற்சி மேற்கொள்ள முடியும். சி.ஏ., படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்பதே இல்லை. பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதுடன், சமூகத்தில் சிறந்த அங்கீகாரமும் கிடைக்கிறது. ஐ.சி.ஏ.ஐ., மட்டுமே சி.ஏ., தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்கும் உரிமையை பெற்றுள்ளது. வேறு எந்த தனியார் நிறுவனங்களாலும், பயிற்சி மையங்களாலும் வெளியிடப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். 



-எஸ். பன்னாராஜ், தலைவர், எஸ்.ஐ.ஆர்.சி.,- ஐ.சி.ஏ.ஐ.,


capannarajs@icai.org




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us