கல்வி எளிது! | Kalvimalar - News

கல்வி எளிது!செப்டம்பர் 04,2023,11:48 IST

எழுத்தின் அளவு :

நம் நாட்டின் கல்வித்தரம் மென்மேலும் வளர்ந்து, மிக உயரிய நிலையை அடைய தேவையான நூற்றுக்கணக்கான பிரதான அம்சங்களை உள்ளடக்கி, தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.



எந்த ஒரு துறையை சார்ந்த மாணவரும், இதர துறை சார்ந்த அறிவை பெற்றால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும் என்ற இன்றைய சூழலில், மாணவர்களுக்கு பல்துறை அறிவை வளர்க்கும் அற்புத வாய்ப்பை புதிய தேசிய கல்விக் கொள்கை வழங்குகிறது. 



உதாரணமாக, உளவியல் படிக்கும் மாணவர்களுக்கு, நுகர்வோர் மனப்பாங்கு குறித்த அறிவு தேவைப்படுகிறது; மேலாண்மை பயிலும் மாணவர்களுக்கு, அரசு வகுத்துள்ள நுகர்வோர் விதிமுறைகள் குறித்த அறிவு அவசியமாகிறது. இத்தகைய பல்துறை அறிவை விரித்தி செய்யும் வாய்ப்பு மட்டுமின்றி, கல்வி கற்றலும் தேசிய கல்விக் கொள்கையால் எளிதாகிறது.



கல்வியில் ஆர்வம்



ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பிலும், மாணவர்களுக்கு தேவையான பாடப்பிரிவை ஒருங்கிணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இத்தகைய அம்சங்களால், உயர்கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதுடன், இடைநிற்றல் எனும் கல்வியை பாதியில் கைவிடும் நிலை பெரிதும் தவிர்க்கப்படுகிறது. மேலும், உயர்கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரும் உயர்கல்வியை பெரும் நிலை உருவாகி உள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த திறன் வளர்ப்பிலும், அதீத அக்கறை செலுத்தப்படுகிறது. 



நிலையான வளர்ச்சி இலக்குகளை, நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இலகுவான கற்றல் விதிமுறைகளால், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடனான கல்வி பரிமாற்றத்தின் வாயிலாக, உலகளாவிய கல்வி சூழலுக்கு வழிவகுக்கிறது. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறன் வளர்ப்பில் மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தக்கொள்ள ஊக்குவிக்கிறது. 



வேலைவாய்ப்பை வழங்குவதைவிட, வேலையை வழங்கும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையிலான திறன்களை வளர்க்கும் பல்வேறு முக்கிய அம்சங்களை தேசிய கல்வி கொள்கை வகுத்துள்ளது. இத்தருணத்தில், மாணவர்கள் வேலை வாய்ப்பை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்காமல், சுய முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கல்வி கற்க வேண்டும்.



மாற்றம் சாத்தியம்



இத்தனை ஆண்டுகளாக, எதிர்நோக்கி காத்திருந்த மாற்றம் இப்போது சாத்தியமாகி உள்ளது. அத்தகைய மாற்றத்தை தரும் வரப்பிரசாதமான தேசிய கல்விக் கொள்கையை, அனைத்து கல்வி நிறுவனங்களும் மிக சரியாக பயன்படுத்தினால், உலக அரங்கில் அசைக்க முடியாத இடத்தை இந்தியா அடையும். 




-டாக்டர் சுஜாதா சாஹி, துணைவேந்தர், ஐ.ஐ.எல்.எம். பல்கலைக்கழகம், ஹரியானா.


sujata.shahi@iilm.edu




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us