அறிவோம் பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., | Kalvimalar - News

அறிவோம் பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி.,நவம்பர் 03,2023,17:45 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதிலும், ஒருங்கிணைப்பதிலும், உயர்கல்வி தரத்தை உறுதிப்படுத்திவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.



முக்கியத்துவம்


கடந்த 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பல்கலைக்கழக மானியக்குழு துவக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக திகழும் யு.ஜி.சி., பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப் படுத்துவதிலிருந்து, தேவையான நிதியுதவியை வழங்குவது வரை பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. நெட், சி.யு.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வுகள் யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலில், என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.



டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் யு.ஜி.சி.,க்கு புனே, போபால், கொல்கத்தா, ஹைதராபாத், கவுகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. 



பிரதான பணிகள்:


*உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், தரக்கோட்பாடுகளை கட்டமைத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல்


*பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்


*பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் முறைகள், தேர்வு விதிமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி ஆகியவற்றின் தரங்களை கண்காணித்தல்


*பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் குறித்த விதிமுறைகளை உருவாக்குதல்


*கல்வித்துறையில் முன்னேற்றம் குறித்து ஆராய்தல், மானியம் வழங்குதல்


*கல்வித்தரத்தை மேம்படுத்துதல் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்



யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை:


மத்திய பல்கலைக்கழகங்கள் - 56


மாநில பல்கலைக்கழகங்கள் - 460


நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் - 128


தனியார் பல்கலைக்கழகங்கள்- 430


என மொத்தம் ஆயிரத்து 74 பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.



போலி பல்கலைக்கழகங்கள்:


ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 பல்கலைகள் போலியானவை என்று யு.ஜி.சி., பட்டியலிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.



விபரங்களுக்கு: www.ugc.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us