விளம்பரத் துறையில் எதிர்காலம்! | Kalvimalar - News

விளம்பரத் துறையில் எதிர்காலம்!டிசம்பர் 29,2023,11:21 IST

எழுத்தின் அளவு :

இன்றைய உலகில், எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பிரபலமான நிறுவனங்கள் முதல் புதிதாக சந்தைக்கு வரும் நிறுவனங்கள் வரை விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. 



அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் என விளம்பரத்துறை தனது கிளைகளை பரந்து விரித்திருக்கிறது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், நடிகர்கள், போட்டோகிராபி, வீடியோகிராபி, கற்பனையாளர்கள், ஒப்பனையாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பலத்துறையினரின் சங்கமமே விளம்பரத்துறை. அதனால் பல்வேறு துறை சார்ந்த பட்டதாரிகளுக்கும் விளம்பரத்துறையில் எதிர்காலம் உள்ளது.



சந்தை வளர்ச்சி: மெக்கன்ஸி குளோபல் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2025ல் இந்தியா, நுகர்வோர் பொருட்கள் சந்தையில் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் என்கிறது. மேலும், சர்வதேச சந்தை பகுப்பாய்வு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக் குழு, 2023-2028ல் 11.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டும் எனவும், 2028ம் ஆண்டில் 1,412.5 பில்லியன் டாலரை எட்டும் என்றும் கணித்துள்ளது. 



விளம்பரத்தின் நோக்கம்: உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் இடையே பாலமாக இருப்பது விளம்பரம். நுகர்வோர்கள் சந்தைக்கு வரும் புதிய பொருட்களைப் பற்றி விளம்பரங்கள் வாயிலாக அறிந்து கொள்கின்றனர். தேவையை பூர்த்தி செய்வது ஒரு வகை என்றால் தேவைகளை புதிதாக உருவாக்குவதிலும் விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இணைய வழி விளம்பரங்கள் இப்பணியை செவ்வென செய்கின்றன. 



வாய்ப்புகள்: புதிய சிந்தனை மற்றும் முயற்சிகளோடு வரும் புதியவர்களுக்கு விளம்பரத்துறை சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. அதற்கு பல துறைகள் பற்றிய அறிவும், திறமையும் வேண்டும். விளம்பரத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போது அது நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்யும். இத்துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.



கற்பனைத் திறனாளார்: சிந்திக்கத் தூண்டுகிற, கவர்ந்திழுக்கும் கருத்துக்களுடன் விளம்பரங்களை உருவாக்க கற்பனைத் திறன் அவசியம். நல்ல கற்பனைத் திறனுடன், புதுமையான கோணத்தில் எதையும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தான் இத்துறைக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். ஒரு பொருளை சுவாரஸ்யமான முறையில் விளம்பரப்படுத்த கற்பனைத்திறன் பெரிதும் உதவியாக இருக்கிறது. இத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்களுடைய திறனை, விளம்பரத்துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.



விளம்பர நிர்வாகி: விளம்பர நிர்வாகிகள் விளம்பரங்களை உருவாக்கி, அவற்றின் தாக்கத்தை மேற்பார்வையிடுகின்றனர். மேலும் தங்கள் வாடிக்கையாளர்களிடையே விற்பனையை அதிகரிக்க புதுப்புது உத்திகளை வடிவமைக்கின்றனர். விளம்பர நிர்வாகிகள் தங்கள் நிறுவனத்திற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாக வேலை செய்கிறார்கள். விளம்பரங்களை மாற்றி அமைப்பதும், வெவ்வேறு வழிகளில் விளம்பரங்களை தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் சென்றடையும் முறைகளையும் உருவாக்குகிறார்கள்.



பிராண்ட் மேலாளர்: ஒரு பிராண்ட் மேலாளரின் பணி சந்தைப்படுத்தல், அவற்றின் போக்கை கண்காணித்தல் மற்றும் சந்தையில் போட்டித் தயாரிப்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை அடங்கும். தரவுகளைக் கொண்டு பிராண்ட் உத்திகளை உருவாக்குகிறார்கள். தற்போதைய சந்தை நிலவரத்தை ஆராய்ந்து பின் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us